ADDED : ஜூன் 22, 2024 01:38 AM

புதுடில்லி:தேசிய தலைநகரின் சில பகுதிகளில் நேற்று பரவலாக லேசான மழை பொழிந்தது. இது நகரத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிய கடுமையான வெப்ப அலையை ஓரளவு தணித்தது.
டில்லியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் இருந்தது. இதன் எதிரொலியாக இரவிலும் கடும் புழுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இதைத் தவிர்க்க ஏ.சி., பயன்பாடு அதிகரித்தது.
வரலாறு காணாத அளவுக்கு மின்நுகர்வு உயர்ந்தது. வெப்ப அலையால் முதியோரும் நோயாளிகளும் பாதிக்கப்பட்டனர்.
வீடில்லாமல் தெருவோரங்களிலும் நடைபாதைகளிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களின் நிலைமை மோசமாக இருந்தது.
வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கணக்கானோர் ஆங்காங்கே இறந்து கிடந்தனர். வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர்.
வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மருத்துவமனைகளே இல்லை என்ற நிலை உருவானது.
இது ஒருபுறம். மறுபுறம் தண்ணீர் தட்டுப்பாடு.
தலைநகரில் தண்ணீர் பஞ்சம் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது.
தினசரி பயன்பாட்டுக்கே தண்ணீர் இல்லாத நிலை உருவானது. டேங்கர் லாரிகளை எதிர்பார்த்து சாலையோரங்களிலும் தெருவோரங்களிலும் குடும்பம் குடும்பமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று நகரில் பரவலாக மழை பொழிந்தது. இது சில வாரங்களாக நிலவிய கடுமையான வெப்ப அலையை ஓரளவு தணித்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
மழையுடன் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்ஷியஸாக இருந்தது.
'இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். வார இறுதியில் வெப்ப அலையிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும்' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.