சட்டவிரோத சொகுசு விடுதிகள் அகற்றும் பணி இன்று துவக்கம்
சட்டவிரோத சொகுசு விடுதிகள் அகற்றும் பணி இன்று துவக்கம்
ADDED : ஆக 04, 2024 11:01 PM

பெங்களூரு: 'மேற்கு தொடர்ச்சி மலையில் சட்ட விரோத ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதியை அகற்றும் பணிகளை, மேற்கு தொடர்ச்சி வன ஆக்கிரமிப்பு அதிரடிப்படையினர், இன்று முதல் மேற்கொள்வர்' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடகாவின் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலை உட்பட அனைத்து மலை பகுதிகளிலும் உள்ள வனத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள சொகுசு விடுதிகள், ஹோம் ஸ்டேக்களை அகற்ற, மேற்கு தொடர்ச்சி வன ஆக்கிரமிப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இப்படை, முதன்மை தலைமை வன பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது. ஏ.சி.எப்., பதவியில் உள்ள அதிகாரிகள், அந்தந்த மண்டலங்களில் வாரத்தில் இரண்டு நாட்கள், நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க, அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க மேற்கு தொடர்ச்சி வன ஆக்கிரமிப்பு அதிரடிப்படைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
முதலில் அதிக அளவில் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோத சொகுசுவிடுதிகள், ஹோம் ஸ்டேக்களை காலி செய்யவும்; அடுத்தபடியாக தோட்டங்கள், கட்டடங்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். மேற்கு தொடர்ச்சி மலையை ஆக்கிரமித்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சாலைகளை மேம்படுத்துதல்; அறிவியல் பூர்வமற்ற வகையில் 90 டிகிரிக்கு மலையை வெட்டியதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவ்வாறு பணி செய்த ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மலை மறைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளான ஷிராடி காட், சார்மாடிகாட் பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன. நாம் விழித்து கொள்ளாவிட்டால், அடுத்த தலைமுறையினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.