வில் வித்தை, வாள் வீச்சு பயிற்சி அளிக்கும் பள்ளி எஸ்.டி., மாணவர்களுக்கு
வில் வித்தை, வாள் வீச்சு பயிற்சி அளிக்கும் பள்ளி எஸ்.டி., மாணவர்களுக்கு
ADDED : ஆக 03, 2024 11:21 PM

மலை, பழங்குடியினர் குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து, அவர்களுக்கு வில்வித்தை, வாள் வீச்சு பயிற்சி அளித்து, தேசிய அளவில் சிறந்த வீரர்களாக, சந்தேமாரஹள்ளி வில்வித்தை மற்றும் வாள் பயிற்சிப் பள்ளி மாற்றி வருகிறது.
கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரின் சந்தேமாரஹள்ளியில், 2016 - 17ல் வில்வித்தை மற்றும் வாள்பயிற்சி பள்ளியை மாநில இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை துவக்கியது.
இதற்காக மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயிற்சியாளர்கள் செல்கின்றனர். ஏழை, மலைவாழ், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் திறமையை கண்டறிந்து, அவர்களை இப்பள்ளியில் சேர்த்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
45 மாணவர்கள்
ஆரம்பத்தில் 24 மாணவர்கள், இங்கு தங்கி பயிற்சி பெற்று வந்தனர். தற்போது 45 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தினமும் அதிகாலை 5:00 முதல் காலை 7:30 மணி வரை பயிற்சி நடக்கும். அதன் பின், பள்ளியில் பாடம் படித்த பின், மீண்டும் மாலை 4:30 முதல் இரவு 7:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு வில்வித்தை மற்றும் வாள் வீச்சுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இவ்வாறு, தார்வாட் மாவட்டம், ஹாலியாவின் வாடா கிராமத்தில், நான்கு 'சித்தி' சமுதாய குழந்தைகளின் திறமையை கண்டறிந்த பயிற்சியாளர்கள், அவர்களின் பெற்றோரை சந்தித்து எடுத்துரைத்தனர். பெற்றோர் சம்மதத்துடன், இங்கு அழைத்து வந்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
பெருமை சேர்ப்பு
இங்கு பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள், பல்வேறு மாநிலங்களில் நடந்த பல்கலை, மாநிலம், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்று, தேசிய அளவில் இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 2020 - 21ல் வில்வித்தை, வாள்வீச்சு ஆகியவற்றில் மாநில அளவில் 16 பேர் பரிசு பெற்றுள்ளனர். 2021 - 22ல் தனுஷ் என்ற மாணவர், தேசிய அளவில் பரிசு பெற்றார். 2022 - 23ல் 34 பேரும்; 2023 - 24ல் 19 வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளனர்.
அதுபோன்று 'கேலோ இந்தியா' போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளனர்.
தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர் மனோஜ், சர்வதேச அளவில் தேர்வு பெறுவதற்காக, மஹாராஷ்டிராவில் உள்ள 'சாய் ஸ்பார்ட்ஸ்' பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
எஸ்.டி., மாணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இப்பள்ளி, மாநிலத்தின் ஒரே விளையாட்டுப் பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இப்பள்ளியில் நாயக்கர், சோலிகா, காடு குருபா, பழங்குடியின மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வில்வித்தை மற்றும் வாள்பயிற்சிப் பள்ளியில், பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள். இடம்: சாம்ராஜ்நகர்
- நமது நிருபர் -.