ADDED : ஆக 15, 2024 04:00 AM
துமகூரு : சொத்து தராததால் ஏற்பட்ட தகராறில், அரிவாளால் வெட்டி தந்தையை கொன்ற மகன் தலைமறைவாகி விட்டார்.
துமகூரு, கொரட்டகெரே ஆலப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா, 75. இவரது மகன் சித்தப்பா, 45. வெங்கடப்பா பெயரில், 3.5 ஏக்கர் நிலம் இருந்தது.
அந்த நிலத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு விற்றார். இதில் 30 லட்சம் ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தில் 25 லட்சம் ரூபாயை மகளுக்கு, வெங்கடப்பா கொடுத்தார்.
இன்னொரு நிலத்தையும் மகள் பெயரில் வெங்கடப்பா பதிவு செய்தார். தந்தை, சொத்து எதுவும் தராததால், சித்தப்பா கோபம் அடைந்தார். தந்தையிடம் தினமும் தகராறு செய்தார். ஊர் பெரியவர்கள் முன்பு, பஞ்சாயத்தும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவும் தந்தை, மகன் இடையில் சண்டை ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சித்தப்பா அரிவாளை எடுத்து, வெங்கடப்பாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார்.
பலத்த வெட்டு காயம் அடைந்த வெங்கடப்பா பரிதாபமாக இறந்தார். தலைமறைவாக உள்ள சித்தப்பாவை, கொரட்டகெரே போலீசார் தேடி வருகின்றனர்.