ADDED : செப் 01, 2024 11:31 PM
தார்வாட்: கள்ளக்காதலனுடன் ஓடிய இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கண்டுபிடித்து தரும்படி, போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
பெலகாவியின் ராமதுர்காவை சேர்ந்தவர் முன்னா, 35. ஆறு மாதங்களுக்கு முன் தார்வாட் டவுன் ஆஞ்சநேயா நகரில் வாடகை வீட்டில் மனைவி, இரண்டு குழந்தைகளுடன் குடியேறினார்.
முன்னாவுக்கும், எதிர் வீட்டில் வசித்த திருமணமான தங்கம்மா, 33 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
தங்கம்மாவுக்கும் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜூலை 10ம் தேதி முன்னாவும், தங்கம்மாவும் ஓட்டம் பிடித்தனர்.
தங்கம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி அவரது குடும்பத்தினர், தார்வாட் டவுன் போலீசில் புகார் செய்தனர். அவரை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபற்றி அறிந்த ஸ்ரீராமசேனா அமைப்பினர், நேற்று முன்தினம் இரவு தார்வாட் டவுன் போலீஸ் நிலையம் முன்பு, போராட்டம் நடத்தினர். 'லவ் ஜிகாத்' எனும் ஹிந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து, மதம் மாற்றும் முயற்சியில் தங்கம்மா கடத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.
அவர்களை சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.