மலையாள திரை நட்சத்திரங்களை கலங்கடிக்கும் பாலியல் புகார்கள்: சிறப்பு விசாரணை குழு அமைத்தது மாநில அரசு
மலையாள திரை நட்சத்திரங்களை கலங்கடிக்கும் பாலியல் புகார்கள்: சிறப்பு விசாரணை குழு அமைத்தது மாநில அரசு
ADDED : ஆக 26, 2024 12:42 AM

திருவனந்தபுரம்: தங்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக நடிகையர் தெரிவித்த புகார்களைத் தொடர்ந்து, மலையாள நடிகர் சங்க பொதுச் செயலர் பதவியில் இருந்து மூத்த நடிகர் சித்திக்கும், மாநில அரசு நடத்தும் திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து பிரபல இயக்குனர் ரஞ்சித்தும் விலகினர்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் உள்ளதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி விசாரித்து சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அத்துமீறல்
இதில், சில மூத்த நடிகர்கள், இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் மலையாள திரையுலகம் இருப்பதாகவும், அவர்கள் விருப்பப்படியே அனைத்தும் நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
தங்கள் விருப்பத்தை நிறைவேற்றாத நடிகையரின் பட வாய்ப்புகளை இவர்கள் தடுத்து நிறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவரான பிரபல இயக்குனர் ரஞ்சித் மீது குற்றச்சாட்டுகளை கூறினார். பட வாய்ப்பு அளிப்பதற்காக தன்னிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையே மற்றொரு நடிகை ரேவதி சம்பத், பிரபல மூத்த நடிகர் சித்திக் மீது புகார் கூறினார். இந்த விவகாரங்கள் கேரளாவில் அரசியல் ரீதியிலும் பெரும் விவாதத்தை உருவாக்கின.
இந்நிலையில், மாநில திரைப்பட அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ரஞ்சித் நேற்று அறிவித்தார். அதுபோல, ஏ.எம்.எம்.ஏ., எனப்படும் மலையாள நடிகர் சங்க பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகுவதாக சித்திக் அறிவித்தார்.
இதற்கு பல மூத்த நடிகர்கள், இயக்குனர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ரஞ்சித் கூறுகையில், “அகாடமி தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து குறிப்பிட்ட சில தரப்பினர் என்னை குறிவைத்து தாக்குகின்றனர்.
“என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். உண்மை எது என்று விசாரிக்காமலேயே, சில ஊடகங்களும், தனிப்பட்ட நபர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பது கவலை அளிக்கிறது. கேரள அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை,” என்றார்.
இது குறித்து கேரள கலாசார துறை அமைச்சர் சஜித் செரியன் கூறுகையில், “ரஞ்சித்தின் ராஜினாமாவை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முறைப்படி புகார் அளித்தால், சட்டப்படி விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே இடதுசாரி அரசு நிற்கும்,” என்றார்.
கேள்வி
மூத்த நடிகர், மறைந்த திலகனின் மகன் ஷம்மி திலகன் கூறுகையில், ''ேஹமா கமிட்டி அறிக்கை வாயிலாக பல உண்மையான முகங்கள் வெளிச்சத்துக்கு வர வேண்டும்.
''உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். மலையாள நடிகர் சங்கத்தின் தலைவரான மோகன்லால், இது குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டார். சக நடிகர்கள் மீதான புகார்கள், அவருக்கு தெரியாமல் இருக்குமா? இது குறித்து அவர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?,'' என, அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே மலையாள திரையுலகில் கூறப்பட்டுள்ள பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த 7 பேர் அடங்கிய சிறப்பு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.