காங்.,கிற்கு எதிரான போராட்டம் தொடரும்: நிகில் குமாரசாமி
காங்.,கிற்கு எதிரான போராட்டம் தொடரும்: நிகில் குமாரசாமி
ADDED : ஏப் 02, 2024 10:34 PM

தொட்டபல்லாபூர்: ''பா.ஜ., - ம.ஜ.த., இணைந்தது தார்மீக கூட்டணி. காங்கிரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்,'' என மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகருக்கு ஆதரவாக ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி பிரசாரம் செய்தார்.
பிரிக்க முடியாத உறவு
அப்போது அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி இயற்கையாக அமைந்தது. கடந்த முறை, காங்கிரசுடன் தர்மத்துக்கு எதிராக கூட்டணி அமைத்ததால், ஒரு 'சீட்' மட்டுமே கிடைத்தது.
தற்போது காங்கிரசுக்கு எதிரான போரில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது.
கர்நாடகாவின் 28 தொகுதிகளிலும் இரு கட்சியினரும் ஒன்றாக தேர்தல் பணியாற்றுகின்றனர். நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் உறுதியாகஉள்ளனர்.
சிக்கபல்லாபூர் தொகுதிக்கும், குமாரசாமி தொகுதிக்கும் பிரிக்க முடியாத உறவு உள்ளது. குமாரசாமி தான், சிக்கபல்லாபூரையும், ராம்நகரையும் தனி மாவட்டமாக அறிவித்தார்.
ராஜினாமா
தனிப்பட்ட முறையில் முன்னாள் எம்.எல்.ஏ., பச்சேகவுடா மீது மரியாதை உள்ளது. சமீபத்தில் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் நானும், எனது தந்தையும் சந்தித்து, ராஜினாமா செய்ய வேண்டாம் என கேட்டு கொண்டோம்.
காங்கிரசின் ஆசை வார்த்தைக்கு அடிபணிய வேண்டாம் என கேட்டு கொண்டோம். ஆனால் அவர், ம.ஜ.த.,வில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இது அவரது தனிப்பட்ட விஷயம். நானும் எதுவும் கூற வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

