ADDED : மே 30, 2024 06:41 AM
உடுப்பி: உடுப்பி மாவட்டம், காபுவில் வசிக்கும் சரத் ஷெட்டி என்பவர், 2023 பிப்ரவரி 5ல் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது சடலம், தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தது. நண்பர்களே இவரை ஊருக்கு வெளியே அழைத்து வந்து, குத்தி கொன்றனர். ஆறு பேர் இவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியது, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது.
சரத்ஷெட்டி தெய்வ பக்தி கொண்டவர். 30 ஆண்டுகளாக கிராமத்தின் வர்தே பஞ்சுர்லி கடவுளுக்கு சேவை செய்தார். அவர் கொலை செய்யப்பட்டதால், மனம் வருந்திய குடும்பத்தினர், பஞ்சுர்லி கோவிலில், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வேண்டினர்.
அப்போது பூஜாரிக்கு அருள் வந்து, 'கொலையாளியை உங்கள் கண் முன்னே நிறுத்துவேன். அவன் தானாகவே முன் வந்து சரணடைவான்' என, உறுதி அளித்தார். இந்த வாக்கு, தற்போது பலித்துள்ளது.
கொலையில் சம்பந்தப்பட்ட ஐந்து பேர், ஏற்கனவே சரணடைந்தனர். ஆனால் முக்கிய குற்றவாளி யோகீஷ் ஆச்சார்யா, தலைமறைவாக இருந்தார். இவர் நேற்று தானாகவே முன் வந்து, போலீசாரிடம் சரணடைந்தார்.
பஞ்சுர்லி கடவுளின் வாக்கு பலித்துள்ளதாக, கிராமத்தினர்கூறுகின்றனர்.