ADDED : ஏப் 18, 2024 12:37 AM
புதுடில்லி:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியை சேர்ந்த ஒரு வாலிபர், 2015ம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பபிதா புனியா, குற்றம் சாட்டப்பட்ட வாலிபர் குற்றவாளி என அறிவித்தார்.
இதையடுத்து, நேற்று நடந்த விசாரணையின் போது, வாலிபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'குற்றம் நடந்த போது 19 வயது வாலிபரான குற்றவாளிக்கு தற்போது 28 வயது ஆகிறது. சம்பவம் நடந்த காலத்தில் அவர் ஒரு நிறுவனத்தில் மாதம் 12,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்து வந்தார். பெற்றோரை இழந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வயதுக் கோளாறு காரணமாக இந்தக் குற்றம் நடந்துள்ளது. சிறையிலும், ஜாமின் காலத்திலும் அவர் நீதிமன்றத்தின் விதிமுறையை மீறவில்லை. எனவே, வாலிபரின் எதிர்காலத்தைக் கருதி குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வாலிபருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2,500 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் ஷரவன் குமார் பிஷ்னோய், 'குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.

