கதக்கில் சாளுக்கியர் கட்டிய கோவில்கள் சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் சிற்பங்கள்
கதக்கில் சாளுக்கியர் கட்டிய கோவில்கள் சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் சிற்பங்கள்
ADDED : மே 09, 2024 09:30 PM

கதக்கின் லக்ஹுன்டியின் திரிகோடேஸ்வரா மற்றும் சரஸ்வதி கோவில்கள் நாளுக்கு நாள் பக்தர்கள், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கின்றன. இங்குள்ள சிற்பங்கள் மக்களை கவர்கின்றன.
அழகான, பழமையான கோவில்கள், சிற்பங்களை காண வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், கதக் மாவட்டத்துக்கு வரலாம். லக்ஹுன்டியில் வரலாற்று பிரசித்தி பெற்ற திரிகோடேஸ்வரா மற்றும் சரஸ்வதி கோவில்கள் உள்ளன. கலை நயத்துடன் கட்டப்பட்ட கோவில்களை தரிசித்தால், மனதுக்கு அமைதி, பரவசம் கிடைக்கும்.
ஆர்வம்
இன்றைய காலத்தில் பலரும் ஆடம்பர பங்களாக்கள், ஹோட்டல்கள், சொகுசு விடுதிகள், ஷாப்பிங் மால்கள் கட்டுவதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். ஆனால், அன்றைய மன்னர்கள் கோவில்களை கட்டுவதில் அதிக ஆர்வம் காண்பித்தனர்.
சேரன், சோழர், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், கங்கர்கள் என, பெரும்பாலான மன்னர்கள் கட்டிய கோவில்கள், இப்போதும் வரலாற்று சிறப்புகளுக்கு சாட்சியாக உள்ளன.
கதக்கின் லக்ஹுன்டியில் 11வது நுாற்றாண்டில் கல்யாண சாளுக்கிய சமஸ்தானத்தை சேர்ந்த சோமேஸ்வரா என்ற மன்னர் சரஸ்வதி, காயத்ரி, திரிகோடேஸ்வரா கோவில்களை கட்டினார்.
அற்புதமான கலை நயத்துடன், சிற்பங்களுடன் காட்சி அளிக்கின்றன. சரஸ்வதி கோவில் நல்ல நிலையில் இருந்தாலும், கர்ப்ப கிரகத்தில் உள்ள விக்ரகம் சேதமடைந்ததால், இந்த விக்ரகத்துக்கு பூஜைகள் நடப்பது இல்லை. இந்த கோவிலுக்கு கதவு இல்லை.
சிற்பக்கலை காலம்
சாளுக்கியர்கள் கர்நாடகா உட்பட பல மாநிலங்களை 200 ஆண்டுகள் ஆட்சி நடத்தி, இந்த மண்ணை வளப்படுத்தினர். ஒவ்வொரு ஊரிலும் சிறு, சிறு கிராமங்களிலும் கோவில்கள் கட்டினர். சாளுக்கியர் காலத்தை, சிற்பக்கலை காலம் என்றே கூறலாம். ஏனென்றால் மிகவும் நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்ட துாண்கள், வடிவமைக்கப்பட்ட விக்ரகங்களை காணலாம்.
கோவிலின் உட்புறமும், வெளிப்புறமும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், ஒன்றை விட ஒன்று அழகாக தோன்றுகிறது. கற்களால் ஆன மேற்கூரை கொண்டுள்ள சரஸ்வதி கோவிலின் துாண்களே, தனி சிறப்பு கொண்டவை. கோவிலின் உட்புறத்தில் எட்டு துாண்கள் உள்ளன. இவைகள் புராதன சம்பவங்களை பிரதிபலிக்கின்றன.
கோபுரம் இல்லை
இரண்டு ஓரத்தில் சிறு, சிறு கோபுரங்கள் கொண்டுள்ள துாண்களின் மீது யக்ஷ, யக்ஷிணியரின் நடுவில் விஷ்ணு, லட்சுமி அழகாக தோன்றுகின்றனர். வெளிப்புற சுவர்களிலும் கலை நயம் கொண்ட சிற்பங்களை காணலாம்.
திரிகோடேஸ்வரா கோவிலுக்கு கோபுரம் இல்லை. கருங்கற்களால் கட்டப்பட்டது.
புராதண சிறப்பு மிக்க கோவில்களை இன்னும் பிரபலப்படுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், கலை ஆர்வலர்கள் வருகை தரும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என வரலாற்று வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
- நமது நிருபர் -