சித்ரதுர்காவில் இன்றும் தொடரும் பாரம்பரிய உடற்பயிற்சி கலை
சித்ரதுர்காவில் இன்றும் தொடரும் பாரம்பரிய உடற்பயிற்சி கலை
ADDED : செப் 01, 2024 06:03 AM

இன்றைய இன்டர்நெட் யுகத்தில் இளைஞர்கள், தங்களின் உடல் ஆரோக்கியத்துக்காக, மல்டி ஜிம்கள், அதிநவீன உடற்பயிற்சி மையங்களை நாடுகின்றனர்.
இருப்பினும், சித்ரதுர்காவில் பாரம்பரிய உடற்பயிற்சி கலை இன்னும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சித்ரதுர்கா மாவட்டம், கரடிமனே என்ற பாரம்பரிய உடற்பயிற்சிக் கூடம் மற்றும் மல்யுத்தத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில் மல்யுத்தத்துக்கு முதலிடம் கொடுத்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
ஆண்மைக்கும், வீரத்துக்கும் மல்யுத்தமே அடிப்படையாக இருந்தது. சிறிய சந்துகளிலும் கூட கரடிமனே இருந்ததாக பெரியவர்கள் கூறுகின்றனர்.
இன்றும்
'ராஜ்ய பயில்வான்' என இம்மாவட்டத்தைச் சேர்ந்த நஞ்சப்பாவுக்கு, மைசூரு மன்னர், பெயர் சூட்டினார். இதுபோன்று ராமண்ணா, கோபாலப்பா, பைரப்பா ஆகியோர், இக்கலையை மாநிலம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் பரப்பினர்.
இத்தகைய கரடிமனே உடற்பயிற்சி இன்றும் இயங்குகிறது.
நகரில் மூன்று பெரிய கரடிமனேக்கள் உள்ளன. இதில் புருஜனஹட்டி கரடிமனே, அப்பகுதி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சக்தியாக விளங்குகிறது.
இப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தினமும் இங்கு பயிற்சி மேற்கொள்கின்றனர்.
புருஜனஹட்டி கரடிமனே வாலிபர் சங்கத் தலைவர் தேஜண்ணா கூறுகையில், ''எங்கள் உடற்பயிற்சியில் மல்யுத்த பயிற்சி பெற்ற வீரர்கள் இருந்தனர்.
தற்போது அனைவருக்கும் வயதாகிவிட்டது. யாரும் பயிற்சி பெறவில்லை. ஆனாலும், நாங்களே பயிற்சி செய்கிறோம்.
அடுத்த தலைமுறைக்கு இந்த கரடிமனே நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். மாவட்டத்தில் கரடிமனேவுக்கு அழிவே கிடையாது.
இதை நினைவில் கொண்டு, கரடிமனேயை ஊருக்கவிக்க அரசு உதவ வேண்டும்,'' என்றார்.
மல்யுத்த வீரர்கள்
தொட்டபேட்டையில் உள்ள தொட்டகரடிமனே, மாவட்டத்தின் பழமையான கரடிமனேயாகும். இங்கு கர்நாடகா, வெளி மாநிலத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். சமீப காலமாக இந்த கரடிமனே தனது கடந்த காலப் பெருமையை இழந்துவிட்டது. இருப்பினும், சில இளைஞர்கள், தங்கள் சொந்த முயற்சியில் மல்யுத்த பயிற்சி செய்கின்றனர்.
சித்ரதுர்கா நகரில் மற்றொரு சிக்க கரடிமனே உள்ளது. இன்றும் இளைஞர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.