கிராமத்தினர் நுாதன வழிபாடு மழை பெய்ததால் மகிழ்ச்சி
கிராமத்தினர் நுாதன வழிபாடு மழை பெய்ததால் மகிழ்ச்சி
ADDED : மே 13, 2024 06:25 AM

சிக்கமகளூரு: மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டி இரண்டு சிறுவர்களின் இடுப்பில் வேப்பிலை கட்டி, இரண்டு தவளையும் கட்டி வைத்து கிராமத்தினர் ஊர்வலமாக வலம் வந்தனர்.
வறட்சி பாதித்த கிராமங்களில் கழுதை, தவளை, நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற மூடநம்பிக்கை இன்னும் தொடர்கிறது.
சிக்கமகளூரு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியை போக்க, இம்மாவட்டத்தின் தரிகெரே பிருமெனஹள்ளி கிராமத்தினரும், மழை பெய்ய வேண்டி இரு சிறுவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் இடுப்பில் 'வேப்பிலை' சுற்றி, ஒரு குச்சியில் இரு தவளைகளை கட்டி வைத்தனர்.
பின் ஊர்வலமாக கிராமத்தை சுற்றி வந்தனர். ஊர்வலமாக செல்லும் போது, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அரிசி, கோதுமை மாவு சேகரித்தனர்.
சேகரிக்கப்படும் அரிசி, கோதுமையை ஒன்றாக சேர்த்து, உணவு படைத்து, கடவுளுக்கு படைத்தால், மழை வரும் என்று நம்பினர். பூஜை முடிந்ததும், கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய துவங்கியது. இதனால், கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.