ADDED : ஏப் 27, 2024 05:46 AM

சாம்ராஜ்நகர்: ஓட்டுப்பதிவு செய்ய மறுத்த கிராமத்தினர், ஓட்டுச்சாவடியை அடித்து துவம்சம் செய்ததால், பதற்றமான சூழ்நிலை உருவானது.
கர்நாடகாவின், 14 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. இவற்றில் சாம்ராஜ்நகர் தொகுதியும் ஒன்றாகும்.
ஹனுாரின் மலை மஹாதேஸ்வரா மலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களின் மக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யவில்லை என்ற கோபத்தில், தேர்தலை புறக்கணித்தனர். ஓட்டு போட மாட்டோம் என அறிவித்திருந்தனர்.
இன்டிகநத்தா கிராமத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கிராமத்தினர் ஓட்டு போட வரவில்லை.
அதிகாரிகள் கிராமத்துக்கு சென்று, மக்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஓட்டு போட மாட்டோம் என கிராமத்தினர் பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில் கொதித்தெழுந்த கிராமத்தினர், ஓட்டுச்சாவடிக்கு சென்று மேஜை, நாற்காலிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உட்பட, அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.
தீ வைக்கவும் முயற்சித்தனர். இதனால் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது.

