‘ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இன்டர்நெட் வசதி இல்லாதவை’
‘ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இன்டர்நெட் வசதி இல்லாதவை’
ADDED : ஆக 24, 2026 09:21 PM
லக்னோ: ‘‘நம் நாட்டின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில், ‘இன்டர்நெட், புளூடூத், வை பை’ போன்ற வசதிகள் கிடையாது,’’ என, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தின் லக்னோவுக்கு சென்றுள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், அங்குள்ள பிரபலமான, ‘கால்வின் தாலுக்தார்ஸ் கல்லுாரி’யில் மாணவர்களிடையே நேற்று கலந்துரையாடினார்.
அவர் பேசியதாவது:
நம் நாட்டின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொதுத் துறை நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு, ‘இன்டர்நெட், புளூடூத், வை பை’ போன்ற வயர்லெஸ் இணைப்புகள் கிடையாது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை; நம்பகமானவை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை நம்புவதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை மாணவர்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில், 100 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவ்வளவு பெரிய வாக்காளர் பட்டியலுக்கான தேர்தலை நடத்துவது என்பது மிகப்பெரிய பணி. 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், வாக்காளர்களாக பதிவு செய்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
