ரோடு பள்ளங்கள் மூடும் பணிகள் துரிதம்; மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல்
ரோடு பள்ளங்கள் மூடும் பணிகள் துரிதம்; மாநகராட்சி தலைமை கமிஷனர் தகவல்
ADDED : செப் 05, 2024 05:11 AM

பெங்களூரு : ''பெங்களூரில் ரோடு பள்ளங்களை மூட, துணை முதல்வர் 15 நாட்கள் கெடு விதித்துள்ளார். அனைத்து மண்டலங்களிலும் பள்ளங்களை மூடும் பணிகள் நடக்கின்றன,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மொபைல் செயலியில் பொது மக்களும், போக்குவரத்து போலீசாரும் ரோடு பள்ளங்கள் குறித்து, மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்த பள்ளங்களை மூடும்படி, அந்தந்த மண்டலங்களின் அதிகாரிகள், பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளங்களை மூடும் பணிகள் துரிதமாக நடக்கின்றன.
மொபைல் செயலியில், 1,800 புகார்கள் வந்துள்ளன. இதன்படி அனைத்து பள்ளங்களை மூட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பை அள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு, ஏப்ரல் முதல் பில் பாக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் பேச்சு நடத்தப்படும். பல்வேறு நகரங்களில் குப்பை அள்ளும் நடைமுறை குறித்து, ஆய்வு செய்ய துணை முதல்வருடன், சென்னைக்கு சென்றிருந்தேன். குப்பை அள்ளுவது, ரோடுகள் நிர்வகிப்பு பற்றி ஆய்வு செய்தோம்.
இது போன்று, மற்ற நகரங்களிலும் ஆய்வு செய்து, பெங்களூரில் செயல்படுத்துவது குறித்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.
பிளாஸ்டர் ஆப் பாரீஸ் விநாயகர் சிலைகள் விற்பனை மற்றும் பிரதிஷ்டை செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை விற்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஓ.பி., சிலைகள் நீரில் கரையாது. எனவே அனைவரும் சுற்றுச்சூழலுக்கு தகுந்த விநாயகர் சிலைகளை வைத்து பூஜிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.