ADDED : ஜூலை 23, 2024 10:44 PM
தாவணகெரே : தாவணகெரே அருகே 2 கோவில்கள், ஆறு வீடுகளில் தொடர் திருட்டு நடந்துள்ளது.
தாவணகெரே நியாமதி டவுனில் காலம்மா தேவி அம்மன், மூகாம்பிகை அம்மன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், அர்ச்சகர்கள் கோவிலை பூட்டிவிட்டுச் சென்றனர்.
நள்ளிரவில் இரண்டு கோவில்களின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், காலம்மா தேவி அம்மன் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், மூகாம்பிகை கோவிலில் பணத்தையும் திருடியுள்ளனர்.
தொடர்ந்து கோவில்களை சுற்றி உள்ள ஆறு வீடுகளிலும் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை திருடி தப்பிச் சென்றுள்ளனர். நேற்று காலையில் அர்ச்சகர்கள் வந்து பார்த்தபோது, கோவில்களில் திருட்டு நடந்தது தெரிந்தது.
தகவல் அறிந்த போலீசார், திருட்டு நடந்த கோவில்கள், வீடுகளில் பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது துாரம் மோப்பம் பிடித்து ஓடி நின்றது. யாரையும் பிடிக்கவில்லை. திருடப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு தெரியவில்லை.
நியாமதி போலீசார் விசாரிக்கின்றனர்.

