ADDED : டிச 07, 2024 02:04 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, தமிழகம் உட்பட நாடு முழுதும் புதிதாக 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன்படி தேனி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி அமைய உள்ளது.
புதிதாக 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிறுவவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளை விரிவாக்கம் செய்யவும், மொத்தம் 5,872 கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நவோதயா வித்யாலயா திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களில் 28 நவோதயா வித்யாலயா பள்ளிகளை அமைக்கவும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டில்லி - ஹரியானா இடையேயான தொடர்பை மேலும் மேம்படுத்தும் வகையில், 26 கி.மீ., துாரம் கொண்ட டில்லி மெட்ரோவின், நான்காம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- நமது சிறப்பு நிருபர் -