கோவிலுக்குள் செல்வதில் தகராறு இரு தரப்பு மோதலால் பரபரப்பு
கோவிலுக்குள் செல்வதில் தகராறு இரு தரப்பு மோதலால் பரபரப்பு
ADDED : மே 26, 2024 09:08 PM

பல்லாரி: கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்ததாக கூறி, அர்ச்சகரை வாலிபர் திட்டியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
பல்லாரியின் கம்ப்ளி ஹொன்னள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அர்ச்சகர், தலித் சமூகத்தை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த, ஹுலுகப்பா என்பவர் சென்றார்.
கோவிலை சுத்தப்படுத்துவதால், சிறிது நேரம் வெளியே காத்திருக்கும்படி, ஹுலுகப்பாவிடம், அர்ச்சகர் கூறினார். ஆனால் வேண்டும் என்றே கோவிலுக்குள் விடவில்லை என்று, அர்ச்சகரை, ஹுலுகப்பா திட்டினார்.
மேலும், ஹுலுகப்பா தன் சமூகத்தை சேர்ந்தவர்களிடம், மொபைல் போனில் பேசி வரவழைத்தார். அர்ச்சகர் தரப்புக்கும் ஆதரவாக சிலர் அங்கு வந்தனர்.
பேச்சு நடந்த போதே, இரு தரப்பினர் இடையில் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சிலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த குடுதினி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், ஹொன்னள்ளி கிராமத்திற்கு சென்று, இரு தரப்பிடமும் பேச்சு நடத்தினார்.
இதனால், இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். ஆனாலும், தாக்குதல் சம்பவம் குறித்து, இருதரப்பினரும் அளித்த புகாரில், குடுதினி போலீசில் வழக்கு பதிவாகி உள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க, கோவில் முன் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

