ADDED : ஆக 07, 2024 02:17 AM
புதுடில்லி, ''ஜன்தன் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 'மினிமம் பேலன்ஸ்' எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, பொதுத் துறை வங்கிகள், 8,500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததாக, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ''வங்கிக் கணக்குகள் இல்லாதவர்களுக்கு நிதிச் சேவைகளை வழங்குவதற்காக துவங்கப்பட்ட ஜன்தன் யோஜனா மற்றும் ஏழை மக்களுக்கான அடிப்படை சேமிப்பு திட்ட கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற வகையான கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கவில்லை என்றால் மட்டுமே வங்கிகள் அபராதம் விதிக்கின்றன,'' என்றார்.