கேரளா போன்ற ஹேமா கமிட்டி தேவையில்லை 'பாஸ்' கமிட்டி அமைக்க மகளிர் ஆணையம் உத்தரவு
கேரளா போன்ற ஹேமா கமிட்டி தேவையில்லை 'பாஸ்' கமிட்டி அமைக்க மகளிர் ஆணையம் உத்தரவு
ADDED : செப் 17, 2024 04:04 AM

பெங்களூரு, : கேரளா போன்று கமிட்டி அமைப்பதற்கு, கன்னட திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இறுதியில், மத்திய அரசு விதிமுறைப்படி, பாலியல் தொந்தரவு தடுக்கும், 'பாஸ்' கமிட்டி அமைக்கும்படி, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி உத்தரவிட்டார்.
கேரள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவு குறித்து விசாரிக்க, ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. விசாரணை அறிக்கையில் பல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இது போன்று, கன்னட திரையுலகிலும் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவு குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என்று சில நடிகையர், முதல்வர் சித்தராமையாவிடம், சமீபத்தில் மனு அளித்தனர்.
முக்கிய ஆலோசனை
இந்நிலையில், மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி முன்னிலையில், பெங்களூரில் சிவானந்த சதுக்கம் அருகில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில், நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது, நீது ஷெட்டி, சஞ்சனா கல்ராணி உட்பட சில நடிகையர், கேரளா போன்று கமிட்டி அமைக்கும்படி வலியுறுத்தினர். இதற்கு, தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது கடும் வாக்குவாதம் நடந்தது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், அனைவரையும் சத்தம் போட்டார்.
அப்போது, தயாரிப்பாளர் சா.ரா.கோவிந்த் பேசுகையில், ''கன்னட திரையுலக பிரச்னைகளை தீர்ப்பதற்கு, வர்த்தக சபை உள்ளது. எந்த பிரச்னையாக இருந்தாலும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம். கமிட்டி தேவை இல்லை.
''சிறிய தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவர். முதலீடு செய்வதற்கு பைனான்சியர்கள் முன் வரமாட்டார்கள்,'' என்றார்.
இறுதியில், கேரளா போன்ற கமிட்டி தேவை இல்லை என்ற கருத்து வலுத்தது. இந்த கமிட்டியை பொருத்தவரையில், அரசு தான் அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கால அவகாசம்
இறுதியாக நாகலட்சுமி சவுத்ரி கூறியதாவது:
மகளிர் மாண்பை காப்பாற்றுவது மகளிர் ஆணையத்தின் பணி. மத்திய அரசு உத்தரவுப்படி, கன்னட திரையுலகத்தில் இதுவரை 'பாஸ்' என்ற பாலியல் தொந்தரவு தடுக்கும் கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை.
இந்த பாஸ் கமிட்டி, அனைத்து துறைகளிலும், ஒவ்வொரு நிறுவனத்திலும் அமைக்க வேண்டும். எனவே கன்னட திரையுலகிலும் பாஸ் கமிட்டி அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
இந்த குழுவின் தலைவராக, மூத்த நடிகை இருப்பார். மகளிர் ஆணையம் தரப்பில் ரகசிய சர்வே நடத்தப்படும். அதன் பின், அரசுடன் அமர்ந்து பேசி முடிவு எடுக்கப்படும். கேரளா போன்று கமிட்டி அமைப்பதற்கு முன், நாம் சரி செய்வோம். அடுத்த 15 நாட்களில், கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில், மகளிர் ஆணையத்துக்கு அறிக்கை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.