'மேகதாது திட்டம் தேவையே இல்லை' ;பெங்களூரு விஞ்ஞானி திட்டவட்டம்
'மேகதாது திட்டம் தேவையே இல்லை' ;பெங்களூரு விஞ்ஞானி திட்டவட்டம்
ADDED : ஆக 12, 2024 10:59 PM

பெங்களூரு :“பெங்களூருக்கு தேவை யான தண்ணீர் நகருக்குள்ளேயே கிடைக்கிறது.
''லிங்கனமக்கி அணையில் இருந்தும், மேகதாதுவில் அணை கட்டியும் தண்ணீர் கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு கைவிட வேண்டும்,” என, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தின் ஆய்வக விஞ்ஞானி ராமசந்திரா தெரிவித்துள்ளார்.
நீர் மறுசுழற்சி
இது குறித்து அவர் கூறியதாவது:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஆண்டுதோறும், 75 முதல் 80 செ.மீ., மழை பெய்கிறது.
மழைநீரை சேகரிக்கும் வசதியை ஏற்படுத்திக் கொண்டால், 15 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்கலாம். அதேபோன்று இங்குள்ள ஏரிகளில் 16 டி.எம்.சி., தண்ணீர் இருப்புள்ளது. மொத்தம் 31 டி.எம்.சி., தண்ணீர் பெங்களூரிலேயே கிடைக்கிறது.
பெங்களூருக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் தண்ணீர், 18 டி.எம்.சி., மட்டுமே. நகரின் தேவைக்கும் அதிகமான தண்ணீர் கிடைக்கிறது.
நீர் மறுசுழற்சி வாயிலாக நீர் நிலைகளின் மீதான அழுத்தத்தை குறைக்கலாம். ஏரிகளை சீரமைத்தால், குடிநீருக்கு மற்ற நகரங்களை நம்பிஇருப்பதை தவிர்க்கலாம்.
பெல்லந்துார் ஏரியை சுத்திகரிக்கும் எங்களின் முயற்சிக்கு, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பெல்லந்துார், வர்த்துார் ஏரிகளின் நீரை பெங்களூரு மக்கள் பயன்படுத்தத் துவங்கினால், காவிரி நீரை நம்பியிருப்பதை குறைக்கலாம். ஒவ்வொரு வார்டிலும் சிறிய வனத்தை உருவாக்க வேண்டும். இளம் தலைமுறையினருக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேகதாது அணை திட்டத்தால், 12,355 ஏக்கர் வனப்பகுதி நாசமாகும். இந்தளவு வனப்பகுதிக்கு, 100 டி.எம்.சி., தண்ணீரை சேகரிக்கும் திறன் உள்ளது.
இவ்வளவு தண்ணீர் சேகரிக்கும் வனப்பகுதியை அழித்து, சிமென்ட் அணை கட்டி 45 டி.எம்.சி., நீரை சேகரிப்பதாக கூறுவதில் அர்த்தம் உள்ளதா?
எதிர்ப்பு
அதேபோன்று, லிங்கனமக்கி அணையில் இருந்தும் பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சிக்கு, என் உயிர் உள்ள வரை எதிர்ப்பு தெரிவிப்பேன்.
இதற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி, நகருக்கு நல்லது அல்ல. இது, பூமிக்கடியில் வாழும் நுண்ணுயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

