ADDED : மே 22, 2024 01:24 AM
மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, உ.பி.,யின் வாரணாசிக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்படஇருந்தது. இந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
இந்நிலையில், காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆண் பயணி ஒருவருக்கு, இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவரின் இருக்கை ஒதுக்கப்பட்டு விட்டது. அந்த இருக்கையில், ஏற்கனவே மற்றொரு பயணி இருந்ததால், அவர் இருக்கை பின்னால் நின்றார்.
விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்படவிருந்த நிலையில், பயணி ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்த விமான ஊழியர்கள், விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விமான நிறுத்துமிடத்துக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து, விமானத்தில் நின்றபடி இருந்த பயணி இறக்கி விடப்பட்டார். ஒரு மணி நேர தாமதத்துக்கு பின், விமானம் மும்பையில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்டுச் சென்றது.
இது குறித்து, இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், 'விமானம் புறப்படுவதற்கு முன் இந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணி கீழே இறக்கி விடப்பட்டார்.
'காத்திருப்பு பயணி ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்ட பயணிக்கான இருக்கை ஒதுக்கப் பட்டதால் இப்பிரச்னை ஏற்பட்டது' என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
விமான நிறுவனங்கள், காலி இருக்கைகளுடன் பறப்பதை தவிர்க்க சில நேரங்களில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்வது வழக்கம்.
கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணியர், போதிய எண்ணிக்கையில் பயணியர் இல்லாதது உள்ளிட்ட வற்றால், கூடுதலாக விற்பனையாகும் டிக்கெட்டுகளால் பிரச்னைகள் எழுவதில்லை.
ஆனால், நேற்று மும்பையில் இருந்துபுறப்பட்ட இண்டிகோவிமானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையான தால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

