நஞ்சன்கூடு கோவில் நிர்வாகம் மீது புகார் உண்டியலில் பக்தரின் கடிதத்தால் பரபரப்பு
நஞ்சன்கூடு கோவில் நிர்வாகம் மீது புகார் உண்டியலில் பக்தரின் கடிதத்தால் பரபரப்பு
ADDED : ஆக 08, 2024 05:55 AM

மைசூரு: மைசூரு நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில் உண்டியல் எண்ணும் போது, 'கோவில் நிர்வாகத்திடம் இருந்து பக்தர்களை காப்பாற்று' என்ற கடிதம் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடில் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. தென் காசி என்றும் அழைக்கப்படுகிறது.
பல லட்சம்
இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோவிலில் உள்ள 21 உண்டியல்களும் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டன. இதில், பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி என காணிக்கையாக வழங்கியிருந்தனர்.
சில பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேற கடிதங்களும் எழுதி, காணிக்கையாக போடுகின்றனர்.
அதில், பக்தர்கள் ஒருவர் பணத்துடன் எழுதிய கடிதத்தில், 'எண்ணற்ற பக்தர்களை வைத்துள்ள நீங்கள், மாதந்தோறும் கோடிக்கணக்கில் பணத்தை மடியில் கொட்டுகிறீர்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நிர்வாகத்திடம் இருந்து அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்பது வேதனையும், கொந்தளிப்பையும் அளிக்கிறது.
தங்கும் வசதி
'பக்தர்கள் தங்குவதற்கு சரியான வசதி இல்லை. எனவே வீட்டை கட்டி, பக்தர்கள் படும் சிரமங்களை கண்டாவது, அவருக்கு ஞானத்தை கொடுங்கள் என வேண்டி கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று மற்றொரு கடிதத்தில், 'என் தாத்தா, என் தந்தை, நான், என் மகன் அனைவரும் உங்களின் பக்தர்கள்.
ஒவ்வொரு பவுர்ணமி, விசேஷ நாட்களில் உங்களை தரிசிக்க நீண்ட துாரத்தில் இருந்து வருகிறோம்.
'உங்களின் பார்வையால் எங்கள் அனைத்து கஷ்டங்களும் நீங்குகின்றன. ஆனால் உங்களை பார்க்க வரும் போது, காலையில் துாங்குவதற்கு ஒரு சிறிய இடம் கூட இல்லை. கபிலா ஆற்றுக்கு சென்றால், உடைகளை மாற்ற இடமில்லை. மோசமான அமைப்பாக கோவில் நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்' என குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று, வீட்டு மனை பிரச்னை, பெண்கள் உடை மாற்றும் அறை, உள்கட்டமைப்பு என 150க்கும் மேற்பட்ட கடிதங்கள் கிடைத்தன.
பெங்களூரு, மைசூரு, மாண்டியா உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இவற்றை பார்த்து, கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உண்டியலில் காணிக்கை பணத்துடன், பக்தர்கள் எழுதி போட்டுள்ள கடிதங்கள்.