கொள்ளை அடிக்கிறாங்க... என்னால முடியல : உடைந்தது ஐ.ஏ.எஸ்., மாணவியின் கனவு
கொள்ளை அடிக்கிறாங்க... என்னால முடியல : உடைந்தது ஐ.ஏ.எஸ்., மாணவியின் கனவு
ADDED : ஆக 03, 2024 09:01 PM

புதுடில்லி: டில்லியில் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொரு சம்பவம்
அண்மையில் டில்லியின் பழைய ராஜீந்தர் நகரில் பெய்த கனமழையால், ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்திற்குள் வெள்ளம் புகுந்தது. இதில், 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், அதே பகுதியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவி தற்கொலை
மகாராஷ்டிராவைச் சேர்ந்த அஞ்சலி என்னும் மாணவி டில்லியில் தங்கி ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால், அவருக்கு பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட மனவிரக்தியால், தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஜூலை 21ம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்த கடிதம் தற்போது சிக்கியுள்ளது.
மன்னித்து விடுங்கள்
அதில், தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது: அம்மா, அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். வாழ்க்கையில் பிரச்னைகள் நிறைந்து இருக்கின்றன. நிம்மதி இல்லாததால் இந்த முடிவை எடுக்கிறேன். எனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும், எந்த முன்னேற்றமும் இல்லை.
கட்டணம் அதிகம்
யு.பி.எஸ்.சி., தேர்வை ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால், நான் தற்போது நிலையற்று இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதேபோல, மாணவர்கள் தங்கும் விடுதிகளின் கட்டணமும் அதிகமாக இருக்கிறது. எங்களைப் போன்ற மாணவர்களிடம் கொள்ளை அடிக்கிறார்கள். எனவே, இந்தக் கட்டணங்களை அரசு குறைக்க வேண்டும்,' என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.