ADDED : மே 23, 2026 04:31 AM
சொல்கிறார்கள்/ 24/05/26 ஞாயிறு 2 இதழ்
-–––––––––
பசுமை விகடன், மார்ச்., 25. 2026. பக்: 66
குடும்பத்துடன்
வெற்றிகரமான
விவசாயம்!
––––––––––––
புதுக்கோட்டை மாவட்டம், பாலாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த, 64 வயதாகும் ராஜேந்திரன்:
என் அப்பா, 4 ஏக்கர் பரப்பில் நெல், நிலக்கடலை விவசாயம் செய்து வந்தார். நான் தகவல் தொழில்நுட்ப படிப்பு முடித்து, திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள, ‘பெல்’ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு திருமணமானபோது, 2 ஏக்கர் நிலத்தை அப்பா கொடுத்தார்.
கடந்த 1990ம் ஆண்டு, 1.5 ஏக்கர் பரப்பில், 110 தென்னை மரங்களை நடவு செய்து, மீதி அரை ஏக்கர் பரப்பில், பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். ஓராண்டுக்கு, ஒரு தென்னை மரத்தில் இருந்து சராசரியாக, 125 தேங்காய்கள் கிடைத்தன.
நான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக, 10 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் வாங்கி, மரப்பயிர்களை நடவு செய்தேன். மொத்தம், 12 ஏக்கர் பரப்பில், 30 செம்மரங்களையும், 160 தேக்கு மரக்கன்றுகளையும் நடவு செய்தேன்.
செம்மரங்கள் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி அடைந்தன. அதனால், ஆர்வம் அதிகமாகி, 2007ல் 60 செம்மரங்களை நட்டேன். அவையும் நன்கு வளர்ந்தன. 160 தேக்கு மரங்களில், 100 மரங்களை மட்டும் வெட்டி, வீட்டுக்கு தேவையான கட்டில், சோபா என்று செய்தது போக, மீதி மரங்களை, 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன்.
மரங்கள் முதிர்ச்சி அடைவதற்குள் அறுவடை செய்ததால், நல்ல விலை கிடைக்கவில்லை. மீதி, 60 தேக்கு மரங்கள் செழிப்பாக வளர்ந்து நிற்கின்றன. ஆரம்பத்தில் நடவு செய்த, 30 செம்மரங்களும் கிட்டத்தட்ட, 30 வயதில் முதிர்ச்சி அடைந்து, வைரம் பாய்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கின்றன. மொத்தம், 30 மரங்களும் சேர்த்து, 6 டன் எடை இருக்கும்.
டன்னுக்கு, 22 லட்சம் ரூபாய் கொடுப்பதாக ஒரு வியாபாரி சொல்கிறார். நான் ஒரு டன்னுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை எதிர்பார்க்கிறேன். அந்த விலைக்குதான் விற்பனை செய்வேன்.
கடந்த 2010ல், 4 ஏக்கர் பரப்பில், 300 தென்னை மரங்கள் நடவு செய்தேன். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக, 150 தேங்காய்கள் கிடைக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன், 4 ஏக்கர் பரப்பில், 250 தென்னங்கன்றுகள் நட்டேன். அவை ஓரளவு வளர்ந்ததும், மிளகு சாகுபடி செய்து, இந்த மரங்களில் மிளகுக்கொடியை ஏற்றிவிடலாம் என்ற யோசனையும் உள்ளது.
ஓடியாடி நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னுடன் மனைவி மற்றும் இரண்டு மகன்களும் விவசாய வேலைகளை ஆர்வமாக செய்கின்றனர்; அனைவருடைய ஒத்துழைப்பும் இருப்பதால், விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடிகிறது.
தொடர்புக்கு: 94431 73109.
***
