ADDED : மே 29, 2026 04:10 AM
சொல்கிறார்கள்/ 30/05/26 சனிக்கிழமை இதழ்
-––––––––––––
குமுதம் மண்வாசனை ஏப்ரல்., 2026 பக்:33
குறைந்த முதலீட்டில்
நிறைவான லாபம் தரும்
முருங்கை சாகுபடி!
––––––––––––––
முருங்கை சாகுபடியில் ஈடுபட்டுள்ள மதுரை மாவட்டம், மாவிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த, ஏ.அர்ச்சுனன்:
ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கும் முருங்கை கீரை, முருங்கைக்காய் என, முருங்கை சார்ந்த பொருட்கள் அனைத்துமே குறைந்த விலையில் கிடைப்பதால், உலகம் முழுதும் அதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் விளையும் முருங்கைக்கு அதிக வரவேற்பு உள்ளது.
எப்போதும் குறைந்த விலையில் கிடைக்கும் முருங்கைக்காய், பருவமற்ற காலங்களில் தங்கத்தின் விலை போல அதிகரிப்பது, விவசாயிகளை மகிழ்விக்கிறது. ஒரு முறை மட்டுமே பயிரிட்டு சரியான முறையில் பராமரித்தால், ஆண்டுதோறும் தொடர்ச்சியாக பலனளிப்பதுடன், வெட்ட வெட்ட புதிதாக வளர்ந்து, பல ஆண்டுகள் விளைச்சல் தரும்.
முருங்கையை நடுவதற்கு, வேலியில் இருந்து நிலத்தின் அனைத்து பக்கங்களிலும், சுற்றிலும், 5 அடி இடைவெளி அவசியம். இது, மரங்கள் வளரும்போது அதன் கிளைகள் நிலத்தை விட்டு வெளிப்பக்கம் வளர்வதற்கும், நாம் நிலத்தை எளிதாக பராமரிப்பதற்கும் உதவும். ஒரு ஏக்கரில், 125 மரங்கள் வரை வளர்க்க முடியும்.
முதல் நான்கு மாதங்கள் வரை, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த இரண்டாவது மாதத்தில் பூச்சித் தாக்குதல் ஏற்படக்கூடும். பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து, செடிகளின் மேல் தெளித்தால் சரியாகிவிடும். ஐந்தாவது மாதத் துவக்கத்தில் பூக்கத் துவங்கும்; அதன்பின் கிளைகளை வெட்டக்கூடாது.
அப்போது, 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும். ஆறாவது மாதம் முடியும் முன்பே காய்க்கத் துவங்கும். நில பராமரிப்பு, மருந்து, உரம் மற்றும் பராமரிப்பு என, ஏக்கருக்கு 35,000 முதல் 40,000 ரூபாய் வரை செலவாகும். அடுத்தடுத்த ஆண்டுகளில், பராமரிப்புக்கு சராசரியாக 15,000 ரூபாய் மட்டுமே செலவாகும்.
ஒரு மரத்திற்கு, 50 முதல் 60 கிலோ என, ஒரு ஏக்கரில் உள்ள 125 மரங்களில் இருந்து, 7.5 டன் முருங்கைக் காய்கள் கிடைக்கின்றன. பருவமற்ற மாதங்களில் கிலோ, 50 ரூபாய்க்கு கீழ் சென்றதே இல்லை.
அதிகபட்சமாக, 2019 நவம்பரில், கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையானது. எனவே, 50 ரூபாய் என்ற விலையை கொண்டு கணக்கிட்டாலே, ஒரு ஏக்கருக்கு, 3.75 லட்சம் ரூபாய் வரவாகவும், செலவுகள் போக ஆறே மாதங்களில், 3.50 லட்சம் ரூபாய் லாபமாகவும் கிடைத்து வருகிறது.
***
