ADDED : ஜூன் 28, 2026 08:10 AM
சொல்கிறார்கள்/ 29/06/26 திங்கள் இதழ்
––––––––
பசுமை விகடன், ஏப்ரல்., 25.2026. பக்:34
–––––––––––––––––––
‘20 ஏக்கர் மா சாகுபடியில்
ஓராண்டு லாபம்
ரூ.40 லட்சம்!’
–––––––––––––––––––
வறட்சியான, பாறைகள் நிறைந்த நிலத்தில், 40 ரக மாம்பழங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும், மஹாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டத்தை சேர்ந்த, காகாசாஹேப் சாவந்த்:
நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எங்கள் ஊரிலேயே பிரபல நிறுவனம் ஒன்றில், ‘ஆட்டோ மெக்கானிக்’காக வேலை செய்தேன். திடீரென புனேவுக்கு இடமாறுதல் செய்ததால், வேலையை ராஜினாமா செய்து விட்டு, விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். உடன் பிறந்த இரு சகோதரர்களும், எங்களது குடும்ப சொத்தான 20 ஏக்கர் நிலத்தை என் பொறுப்பில் ஒப்படைத்தனர்.
எங்கள் மாநிலத்தில் பெரும்பாலும் ‘அல்போன்சா’ ரக மாம்பழங்கள் தான் சாகுபடி செய்யப்படும். ஆனால், குஜராத்தில் இருந்து வரும் ‘கேசர்’ ரக மாம்பழத்திற்கு நல்ல வரவேற்பு உண்டு.
அதனால், 2010ல் கேசர் ரக மாங்கன்றுகளை வாங்கி, 15 ஏக்கரில் நடவு செய்தேன். ஐந்தாம் ஆண்டு முதல் வணிக ரீதியாக மகசூல் கிடைக்க துவங்கியது. படிப்படியாக விளைச்சல் அதிகரித்து, தற்போது ஆண்டுக்கு 30,000 கிலோ பழங்கள் கிடைக்கின்றன. வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து பறித்து செல்கின்றனர்.
விற்பனைக்கு வியாபாரிகளையே முழுக்க நம்பினால், விலையை குறைப்பர் என்பதால் நண்பர்கள், உறவினர்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இயற்கை விவசாயத்தில் விளைந்த பழங்கள் என்பதால் தொடர்ந்து வாங்க ஆரம்பித்தனர். அவர்கள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். தற்போது டில்லி, குஜராத், உ.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள நுகர்வோருக்கும் நேரடியாக பழங்களை அனுப்பி வருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்திலும், 40 மா ரகங்களில் 950 கன்றுகளை நடவு செய்தேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மா ரகங்கள் என் தோப்பில் உள்ளன. எட்டு ஆண்டுகள் வளர்ந்த ஒரு மாமரத்தில், ‘ரத்னா, தசேரி, தைவான், மல்லிகா, வன்ராஜ், பிளாக்ஸ்டோன்’ உள்ளிட்ட 22 வகையான மா ரகங்களை ஒட்டு சேர்த்து கட்டியுள்ளேன்.
இதன் மூலம் பலவிதமான நிறங்களில், பலவிதமான சுவை கொண்ட மாம்பழங்கள் கிடைக்கின்றன. மொத்தம் 20 ஏக்கரில், ஓராண்டுக்கு 40,000 கிலோ பழங்கள் கிடைக்கின்றன. கிலோவுக்கு சராசரியாக 125 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானமும், அதில் 10 லட்சம் ரூபாய் செலவு போக, 40 லட்சம் ரூபாய் லாபமும் கிடைக்கிறது.
***
