தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'அழுக்கு சட்டை அவமானம் அல்ல என் அடையாளம்!'

'அழுக்கு சட்டை அவமானம் அல்ல என் அடையாளம்!'

'அழுக்கு சட்டை அவமானம் அல்ல என் அடையாளம்!'


UPDATED : ஜூலை 01, 2026 02:36 PM

ADDED : ஜூலை 01, 2026 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2026 02:36 PM ADDED : ஜூலை 01, 2026 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை பரவை காலனியில், 'சந்துரு நாராயணா மோட்டார்ஸ்' என்ற பெயரில் மெக்கானிக் கடை நடத்தி வரும் பட்டதாரி பெண், பாண்டி மீனா:

இது, எங்கள் அப்பாவின் தொழில். அவர், 40 ஆண்டுகளாக இந்த ஏரியாவில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். சிறு வயது முதலே நானும், தம்பியும் அப்பாவுடன் கடைக்கு வருவோம். எல்லா கருவிகளின் பெயரும் எனக்கு 5 வயதிலேயே தெரியும். 12 வயதில் கருவிகளை பயன்படுத்தவும், 15 வயதில் கடையில் சிறு சிறு வேலைகள் செய்யவும் ஆரம்பித்தேன்.

அதை பார்த்த உறவினர்கள் பலரும், 'பொட்டப்புள்ளய எதுக்கு லாரி, வேன் வர்ற இடத்துக்கு கூட்டிட்டு போறீங்க?' என்று கேட்டதற்கு, 'ஸ்பேனருக்கு ஆம்பள கை, பொம்பள கைன்னு தெரியாது; யார் திருகினாலும் திருகும்' என்று சொல்லி, தொழில் கற்றுக் கொடுத்தார் அப்பா.

நான் 10ம் வகுப்பு முடித்ததும், விடுமுறையில் இன்ஜின் சார்ந்த வேலைகளை கற்றுக் கொண்டேன். பிளஸ் 2 முடித்ததும், 'ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்' படித்தேன். அப்பா கடையிலேயே வேலைக்கும் சேர்ந்தேன். சொந்தமாக மெக்கானிக் ஷாப் வைக்க வேண்டும் என்பதே என் கனவு.

அந்த நேரம் திடீர்னு உடல்நிலை பாதிக்கப்பட்டு, அப்பா இறந்து விட்டார். உலகமே இருண்ட மாதிரி இருந்தது. 'அப்பா இல்லை என்றாலும், அவர் கற்றுக் கொடுத்த வேலை இருக்கிறது... சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றலாம்' என்று தோன்றியது. தம்பியும் உறுதுணையாக இருப்பதாக கூறினான்.

அம்மாவிற்கு தைரியம் சொல்லி, அப்பா இறந்த ஐந்தாவது நாளே கடையை திறந்தோம். அனுபவம் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எங்களை நம்பி வண்டியை தருவரா என்று யோசித்தோம். 'பொண்ணு என்னத்த சரி செய்ய போகுது' என, பலரும் வெளிப்படையாகவே கேட்டனர்.

ஆனால், என் வேலையும் திறமையும் எல்லாவற்றுக்கும் பதில் கூறியது. தினமும் ஒரு சவால் இருக்கும். சில நேரம் அதிக எடையுள்ள வண்டி பாகங்களை துாக்க வேண்டி இருக்கும். வண்டிக்கு கீழே படுத்தபடி மணிக்கணக்கில் வேலை பார்க்கணும். டீசல் வாசனை, வெயில், சூடு இதெல்லாம் இந்த தொழிலில் சாதாரணம்; ஆனால், எதையும் கஷ்டம் என்று நினைத்ததே கிடையாது. ஏனெனில், இது தான் எங்களுக்கு வாழ்க்கை.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த கடையை நானும், தம்பியும் சேர்ந்து நடத்தி வருகிறோம். சில நேரம் சாலையில் திடீரென வண்டி நின்று விட்டது என தகவல் வரும். அங்கு சென்று சரி செய்து தருவோம்.

பிடித்ததை தைரியமாக செய்யும் துணிச்சலும், போராட்ட குணமும் இருந்தால் எல்லாம் சாத்தியமே. அழுக்கு படிந்த இந்த சட்டை அவமானம் அல்ல; என் அடையாளம்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us