தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : ஜூலை 25, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள் / 26/07/26 ஞாயிறு 2வது இதழ்

-––––––––

அவள் விகடன், ஜூன் 30, 2026, பக்: 48

‘குழந்தை

தொழிலாளர்களை

மீட்டெடுக்கிறேன்!’

–––––––––––

பெண்கள், குழந்தைகள் நலனுக்காக, 40 ஆண்டுகளாக சேவையாற்றி வரும், சென்னையைச் சேர்ந்த சந்திரா தேவி தணிகாசலம்:

படிப்பும், திறமையும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று, சேவை துறையை தேர்ந்தெடுத்தேன். ‘இந்திய குழந்தைகள் நல சங்கம்’ என்ற தொண்டு நிறுவனத்தில், 37 ஆண்டுகளாக இணைந்துள்ளேன். உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஊர்களில், பல தலைமுறைகளாக பெண் சிசுக் கொலைகள் நடந்து வந்தன.

ஒரு குடும்பத்தின் வறுமையை போக்கி விட்டாலே, இது போன்ற குற்றங்கள் குறையும். பெண்களுக்கு அதிகாரமளித்தாலே விழிப்புணர்வு உருவாகும் என்பதால், மகளிர் சுய உதவிக் குழுக்களை துவக்கினோம். உள்நாட்டு, வெளிநாட்டு சமூக நல அமைப்புகள், வங்கிகளுடன் இணைந்து, கடன் உதவி கிடைக்கச் செய்தோம்.

அதன்பின் தான், அதற்கென ஒரு துறையை தமிழக அரசே உருவாக்கியது. இதன் வாயிலாக, 2,500 பெண் குழந்தைகளை காப்பாற்றி, அரசுடன் இணைந்து தத்தெடுக்கும் மையங்களுக்கு அனுப்பி வைத்தோம். அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் தொடர் முயற்சியால், 2000வது ஆண்டுக்கு பின், பெண் சிசுக் கொலைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன.

ஸ்ரீவில்லிபுத்துாரில், குழந்தை தொழிலாளர்கள் மீட்புக்காகவும் பணியாற்றினோம். அங்கு நிறைய குறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்தன. அந்த ஊரில் உள்ள பள்ளிகள் காலியாக இருக்கும். குழந்தைகள், தீப்பெட்டி தொழிற்சாலையில், 10 மணி நேரம் வேலை செய்வர். ஆயிரக்கணக்கான குழந்தை தொழிலாளர்களை மீட்டு படிக்க அனுப்பியதால், அந்தப் பகுதியில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்தது.

வேலுாரில் குடும்பமாக பீடி சுற்றும் தொழில் செய்வர். பெற்றோருக்கு பணம் தேவைப்பட்டால், குழந்தைகளை ஒப்பந்த தொழிலாளர்களாக அடகு வைத்து விடுவர். பெற்றோருக்கு விழிப்புணர்வும், சில இடங்களில் காவல் துறையில் புகார் அளித்தும், பெற்றோரிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தியும், குழந்தைகளை மீட்டு பள்ளிகளில் சேர்த்தோம்.

குழந்தைகள் மீதான வன்கொடுமை மற்றும் புறக்கணிப்பை தடுக்கும் அவசர தலையீட்டு மையத்தை துவங்கி, தொழிற்சாலைகளில், வீடுகளில் தங்கி வேலை செய்யும் குழந்தைகளை மீட்டெடுத்தோம். அதன்பின், இந்திய அளவில் குழந்தைகளுக்கான, ‘1098’ அவசர உதவி தொலைபேசி சேவை கொண்டு வரப்பட்டது.

அந்த சேவையை துவங்குவதற்காக, அரசு அமைத்த குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். தொண்டு நிறுவன பதவி என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல; அது கூடுதல் பொறுப்பு. குழந்தைகள் நலன் சார்ந்து செய்ய இன்னும் பல விஷயங்கள் காத்திருக்கின்றன.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us