ADDED : ஜூலை 27, 2026 04:30 AM
சொல்கிறார்கள் / 28/07/26 செவ்வாய் இதழ்
-––––––––––---––
அவள் விகடன், ஜூன் 30, 2026, பக்: 11
‘இந்தியாவின் முதல்
குதிரை பந்தய
வீராங்கனை நான்!’
--–––––––––––––
குதிரைகள் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும், சென்னையைச் சேர்ந்த ரூபா:
சென்னையில், ஒரு தனியார் குதிரை கொட்டிலில் பிறந்து வளர்ந்தேன். அங்குள்ள குதிரைகளுக்கு என் தாத்தா தான் பராமரிப்பாளர். அப்பா தான், எங்கள் குடும்பத்தின் முதல் குதிரை பயிற்சியாளர். தாத்தாவும், அப்பாவும் எனக்கு, 3 வயதிலேயே குதிரை ஏற்றத்திற்கான பயிற்சி கொடுத்தனர்.
அதன் பின், சென்னை, ‘ரேஸ் கிளப்’பில் பயிற்சியாளர் ஒருவரிடம் ஓராண்டு பயிற்சி எடுத்து, 2002ல் பந்தயத்திற்கு குதிரைகள் ஓட்டும், ‘ஜாக்கி’ உரிமம் வாங்கினேன்.
இந்தியாவின், ‘முதல் சாம்பியன் லேடி ஜாக்கி’ நான் தான். ஒரு சீசனில் அதிகபட்ச ரேஸ்களில் பங்கேற்போரை, ‘சாம்பியன் ஜாக்கி’ என்று கூறுவர். அந்த வகையில், நான் ஏழு முறை சாம்பியனாகி இருக்கிறேன்; சர்வதேச பந்தயங்களிலும் ஜெயித்துள்ளேன்.
‘பொண்ணு தானே... என்ன செய்துவிடப் போகிறாள்’ என்ற பார்வை என் மீதும் இருந்தது. மிகவும் சுமாரான குதிரைகளையே என்னிடம் கொடுத்தனர். அப்படிப்பட்ட குதிரைகளையும் நான் ஜெயிக்க வைத்த பின் தான், பயிற்சியாளர்களுக்கு என் மீது நம்பிக்கை வர ஆரம்பித்தது.
குதிரையேற்ற வீரராக சில தகுதிகள் அவசியம்... உடல் எடை, 60 கிலோவை தாண்டக்கூடாது. அதனால், எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தொடர் பயிற்சிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாடு மிக முக்கியம்.
கடந்த 2012ல் எனக்கு திருமணமானது. கணவர், மருத்துவம் சம்பந்தப்பட்ட வேலையில் உள்ளார். புகுந்த வீட்டார், ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட கட்டுப்பாடான ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், என் ஆர்வத்தை பார்த்து உற்சாகப்படுத்தினர். 2017 வரை குதிரையேற்ற வீரராக இருந்தேன்; இப்போது பயிற்சியாளராக இருக்கிறேன்.
பயிற்சியாளராக இருப்பதில் பொறுப்புகள் அதிகம். என்னிடம் இப்போது, 10 குதிரைகள் உள்ளன. அவற்றுக்கு தினமும் பயிற்சி கொடுக்க வேண்டும்; சத்துள்ள உணவை கொடுக்க வேண்டும்; அதன் உடல்நலத்தையும் பராமரிக்க வேண்டும். குதிரைக்கு 2 வயதாகும்போதே பயிற்சி கொடுக்க ஆரம்பிப்போம்; 8 வயது வரை பந்தயத்தில் ஓடும்; அதன்பின் ஓய்வு கொடுத்து, பயிற்சி பள்ளிக்கு அனுப்புவோம்.
மற்ற நாடுகளில் பல பெண்கள் குதிரையேற்ற வீரராகவும், பயிற்சியாளராகவும் உள்ளனர். ஆனால், நம் நாட்டில் தான் பெண்களே இல்லை. இப்படிப்பட்ட வேலைகள் இருப்பதே பலருக்கும் தெரியாது. விழிப்புணர்வும் அதிகமாக வேண்டும். பெண்களுக்கும் விருப்பம் இருக்க வேண்டும்.
***
