தமிழக அரசு பஸ் மீது கல்வீச்சு திருக்கோவிலுார் வாலிபர் கைது
தமிழக அரசு பஸ் மீது கல்வீச்சு திருக்கோவிலுார் வாலிபர் கைது
ADDED : ஜூலை 22, 2024 06:17 AM

பெங்களூரு: தமிழக அரசு பஸ் மீது கல் வீசிய, திருக்கோவிலுாரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு 11:15 மணிக்கு, திருவண்ணாமலைக்கு 70 பயணியருடன், தமிழக அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் கேசவன் என்பவர் பஸ்சை ஓட்டினார்.
டவுன் ஹால் அருகே சென்றபோது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றது. அப்போது வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏற முயன்றார்.
ஆனால் கூட்டமாக இருந்ததால், பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.
பின் பஸ் அங்கிருந்து புறப்பட்டது. திடீரென அந்த வாலிபர் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் கண்ணாடி நொறுங்கியது. பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.
டிரைவர் கேசவன் உடனடியாக பஸ்சை நிறுத்தி, கல் வீசிய வாலிபரை பிடித்து எஸ்.ஜே., பார்க் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரை சேர்ந்த மகராஜ், 24, என்பதுதெரிந்தது.
குடிபோதையில் இருந்த அவர், பஸ் மீது கல் வீசியதும் தெரியவந்தது. மகாராஜை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பின், பஸ் புறப்பட்டு சென்றது. ஓசூர் சென்றதும் பயணியர் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.