ADDED : அக் 29, 2024 07:21 AM

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், கமலாவுக்கு ஆதரவாக ஓட்டளித்த பின், அனுபவம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது இனிமையானது' என பதில் அளித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பொதுமக்களும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது ஓட்டு செலுத்தும் வசதி உள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தனது சொந்த மாநிலமான டெலாவேரில் ஓட்டுச்சாவடியில் தனது கட்சியை சேர்ந்த கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஓட்டளித்தார். 100க்கும் மேற்பட்ட வாக்காளர்களுடன் வரிசையில் நின்று, பைடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
ஒரு வரி பதில்!
அவர் ஓட்டுச்சாவடியை விட்டு வெளியே வரும் போது அனுபவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, 'இது இனிமையானது' என ஒரே வரியில் ஜோ பைடன் பதில் அளித்தார்.
கமலா ஹாரிஸ், அடுத்த வாரம் அதிபர் தேர்தலில் டிரம்பை தோற்கடிப்பார் என நம்புகிறீர்களா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ' நாங்கள் தோற்கடிப்போம் என்று நம்புகிறோம்' என ஜோ பைடன் பதில் அளித்தார்.

