ஊழலுக்கு எதிராகப் பேசியவர்கள் தான் ஊழல் செய்கிறார்கள்: கெஜ்ரிவாலை சாடிய அனுராக் தாக்கூர்
ஊழலுக்கு எதிராகப் பேசியவர்கள் தான் ஊழல் செய்கிறார்கள்: கெஜ்ரிவாலை சாடிய அனுராக் தாக்கூர்
ADDED : மே 12, 2024 05:07 PM

ஹமிர்பூர்: 'ஊழலுக்கு எதிராகப் பேசியவர்கள் தான் ஊழல் செய்கிறார்கள்' என நிருபர்கள் சந்திப்பில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக சாடினார்.
ஹிமாச்சலப் பிரதேசம் ஹமிர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சரும், ஹமிர்பூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளருமான அனுராக் தாக்கூர் பேசியதாவது: நாம் நமது எல்லைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், சகோதரத்துவத்தைப் பேண வேண்டும்.
ரூ.6.7 லட்சம் கோடி
இந்தியாவின் பொருளாதாரத்தை உலகில் மூன்றாவது இடத்திற்கு கொண்டு செல்ல பிரதமர் மோடி பாடுப்பட்டு வருகிறார். இந்திய ராணுவத்தை பலப்படுத்தினோம். பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டை ரூ.3.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.6.7 லட்சம் கோடியாக உயர்த்தினோம். இவ்வாறு அவர் பேசினார்.
போலியானவை
முன்னதாக, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள 10 வாக்குறுதிகள் குறித்து, அனுராக் தாக்கூர் கூறியதாவது: அவரது உத்தரவாதங்கள் போலியானவை. அவர் தேர்தலில் தோல்வியடையத் தயாராகி வருகிறார். அதனால் போலி வாக்குறுதிகளை அவர் வெளியிடுகிறார். இதனை மக்கள் நம்பவில்லை. இண்டியா கூட்டணிக்கு தலைவர் மற்றும் கொள்கை இல்லை.
ஜனநாயகம்
ஊழலுக்கு எதிராகப் பேசியவர்கள் தான் ஊழல் செய்கிறார்கள். கடுமையான ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக சிறை செல்கிறார்கள். அவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். அவர் எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லலாம், ஆனால் அவரது அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் ஓட்டளிப்பது ஆகும். மக்கள் அனைவரும் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.