அதிர்ச்சியில் உறைய வைக்கும் வினேஷ் எடைக்குறைப்பு ரகசியம் அம்பலம்!
அதிர்ச்சியில் உறைய வைக்கும் வினேஷ் எடைக்குறைப்பு ரகசியம் அம்பலம்!
ADDED : ஆக 17, 2024 08:07 AM

புதுடில்லி: 'கடைசி நேரத்தில் வினேஷ் போகத் உடல் எடையை குறைக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டதை கண்டு, அவர் இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன்' என அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் பங்கேற்றார். பைனலுக்கு முன்னேறியும், எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வெள்ளி பதக்கம் கோரி சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் செய்யப்பட்ட முறையீடு தள்ளுபடி ஆனது.
கூடுதலாக 2.7 கிலோ எடை
இந்நிலையில், கடைசி நேரத்தில் வினேஷ் போகத் உடல் எடையை குறைக்க பயிற்சியில் ஈடுபட்டதை கண்டு இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன்' என அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்தார்.
அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை:
அரையிறுதிப் போட்டி முடிந்ததும், வினேஷ் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். உடனடியாக 1 மணி நேரம் 20 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும், 1.5 கிலோ கூடுதலாகவே இருந்தது.
வியர்வை வரவில்லை
பிறகு 50 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சி செய்தும், அவரது உடலிலிருந்து ஒரு சொட்டு வியர்வையும் வரவில்லை. நாங்கள் அப்போது எந்த ஒரு வாய்ப்பையும் விடுவதாக இல்லை. நள்ளிரவு முதல் காலை 5.30 மணி வரை பல்வேறு உடற்பயிற்சிக் கருவிகளில் அவர் பயிற்சி மேற்கொண்டார். ஒவ்வொரு மணி நேரமும் வெறும் 2-3 நிமிடங்கள் இடைவெளிகள் மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருந்தார்.
ஒருமணி நேரம்
ஒருமுறை அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் மயங்கி விழுந்துவிட்டார். பெரும் சிரமப்பட்டு அவரை எழுப்பி உட்கார வைத்தோம். சற்று நேரத்திலேயே மீண்டும் உடற்பயிற்சியைத் துவங்கினார். ஒரு மணி நேரம் கடுமையான வெப்பம் நிறைந்த தண்ணீரில் இருந்தார்.
அவரது கடுமையான உடற்பயிற்சிகளை பற்றி இங்கே என்னால் விரிவாக சொல்ல முடியவில்லை. இப்போது ஒன்று மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. அவர் கடும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, வினேஷ் போகத் இறந்துவிடுவாரோ என்று நான் அஞ்சினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.