ஆயிரக்கணக்கில் விநாயகர் சிலைகள் 'ஆர்டர்' சென்னப்பட்டணா இடைத்தேர்தலுக்கு புது 'ரூட்'
ஆயிரக்கணக்கில் விநாயகர் சிலைகள் 'ஆர்டர்' சென்னப்பட்டணா இடைத்தேர்தலுக்கு புது 'ரூட்'
ADDED : செப் 01, 2024 11:49 PM

ராம்நகர்: சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கிய கட்சி பிரமுகர்கள், தொகுதி மக்களுக்கு வழங்க ஆயிரக்கணக்கில் விநாயர் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
ராம்நகரின் சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் வெற்றி பெற்று எம்.பி., ஆனதுடன், மத்திய கனரக தொழில் அமைச்சரும் ஆனார். எம்.பி., ஆனதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் சென்னப்பட்டணா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலுக்கு தேதி அறிவிக்கும் முன்பே, அங்கு அரசியல் போட்டி துவங்கி விட்டது.
ராம்நகரில் ராம்நகர், கனகபுரா, சென்னப்பட்டணா, மாகடி என நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் சென்னப்பட்டணாவை தவிர மற்ற மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
சென்னப்பட்டணாவிலும் வெற்றி பெற்று, ராம்நகர் மாவட்டத்தை காங்கிரஸ் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பது, துணை முதல்வரும், கனகபுரா காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான சிவகுமாரின் ஆசையாக உள்ளது.
இதனால் சென்னப்பட்டணாவில் போட்டியிட அவர் ஆசைப்படுகிறார். நானே வேட்பாளர் என்றும் அறிவித்தார். சுதந்திர தினத்தின் போது சென்னப்பட்டணாவில் தேசிய கொடி ஏற்றியதுடன், அடிக்கடி மக்கள் குறை கேட்கும் கூட்டங்களையும் நடத்துகிறார். சமீபத்தில் கூட மாநில அரசு சார்பில் பிரமாண்ட வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டது.
தேர்தலுக்கான வேலையை காங்கிரஸ் துவங்கி இருப்பதால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியிலும் கட்சியினர் பணிகளை துவக்கி உள்ளனர். ஆனால் யாருக்கு சீட் என்பதில் இன்னும் குழப்பம் தீரவில்லை.
பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் சீட் கேட்கிறார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க, பா.ஜ., கூட்டணியில் உள்ள குமாரசாமிக்கு விருப்பம் இல்லை. பா.ஜ., கூட்டணியில் சீட் கிடைக்கா விட்டால் சுயேச்சையாக போட்டியிடவும் அவர் தயாராக உள்ளார்.
தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, மக்களுக்கு வினியோகிக்க 1,001 விநாயகர் சிலைகளுக்கு, ஆர்டர் கொடுத்து உள்ளார்.
சென்னப்பட்டணாவில் ம.ஜ.த., போட்டியிட்டால் குமாரசாமி மகன் நிகில் களமிறக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை அவர் போட்டியிடவில்லை என்றால், நமக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்னப்பட்டணா ம.ஜ.த., தலைவர் ஜெயமுத்து என்பவர் உள்ளார். அவரும் வாக்காளர்களுக்கு வினியோகிக்க 1,000 விநாயகர் சிலைகளை, ஆர்டர் கொடுத்து உள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, யோகேஸ்வர் 500 விநாயகர் சிலைகளை மக்களுக்கு வழங்கினார்.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தோற்று போனதால், விநாயகர் சிலைகளை மக்களுக்கு கொடுக்கவில்லை. இப்போது இடைத்தேர்தலில் மக்களை கவர விநாயகர் சிலைகளை, ஆர்டர் கொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.