பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற மூன்று பேர் 11 ஆண்டுகளுக்கு பின்பு கைது
பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற மூன்று பேர் 11 ஆண்டுகளுக்கு பின்பு கைது
ADDED : மே 26, 2024 06:33 AM
சிக்கஜாலா: பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், அவரது கணவருடன் வேலை செய்த மூன்று பேரை, 11 ஆண்டுகளுக்கு பின்பு, போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு, சஞ்சய்நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. மஹாலட்சுமி லே - அவுட்டில் உள்ள வங்கியில் வேலை செய்தார். இவரது மனைவி விஜயா. எலக்ட்ரானிக் சிட்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வேலைக்குச் சென்ற, விஜயா வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்களுக்கு பின்னர் சிக்கஜாலா பகுதியில் உள்ள, நீலகிரி தோப்பில் அவரது சடலம் மீட்கப்பட்டது.
பாலகிருஷ்ணா மீதான சந்தேகத்தால் அவரை, சிக்கஜாலா போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது தவறு இல்லை என்று தெரிந்தது. இதனால் விடுவிக்கப்பட்டார்.
'சி' அறிக்கை
பிரேத பரிசோதனை அறிக்கையில், விஜயாவை பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரிந்தது. ஆனால் கொலையாளி யார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து கொலையில் சாட்சி, ஆதாரம் சேகரிக்க முடியவில்லை என்று, பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், போலீசார் 'சி' அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதை எதிர்த்து பாலகிருஷ்ணா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது. அவர்களும் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களுக்கும் சாட்சியங்கள் கிடைக்கவில்லை. இதனால் வழக்கு நிலுவையில் போடப்பட்டது.
குற்றப்பத்திரிகை
கடந்த சில மாதங்களாக, சி.ஐ.டி., போலீசார், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை சரிபார்த்தனர். அப்போது விஜயாவின் வழக்கு நிலுவையில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜயா, யாரிடம் மொபைல் போனில் பேசினார் என்ற, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் பாலகிருஷ்ணாவுடன் வங்கியில் வேலை செய்த தீபக் என்பவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விசாரணை நடத்தப்பட்டது. 2013ல் வங்கி மேலாளராக இருந்த நரசிம்மமூர்த்தி, வங்கி ஊழியர் ஹரிபிரசாத், தீபக் ஆகிய, மூன்று பேரும் சேர்ந்து விஜயாவை கற்பழித்துக் கொன்று, உடலை சிக்கஜாலா நீலகிரி தோப்பில் வீசியது தெரிய வந்தது.
மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.