வைர வியாபாரியிடம் மோசடி: நாடகமாடிய மூன்று பேர் கைது
வைர வியாபாரியிடம் மோசடி: நாடகமாடிய மூன்று பேர் கைது
ADDED : ஜூன் 13, 2024 05:04 PM
சாகேத்: ஊழியரை ஏமாற்றி, போலி கற்களை கொடுத்து, மூன்று வைரங்களுடன் தப்பிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தெற்கு டில்லியின் சாகேத் பகுதியில் உள்ள ஒரு மாலில் வைர வியாபாரியின் கடை உள்ளது. இங்கு கடந்த 6ம் தேதி, வைரம் வாங்குவதற்கு இருவர் வந்தனர். வைரங்களை பார்வையிட்ட அவர்கள், அதன் உண்மைத் தன்மையை சோதிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
இதற்காக கரோல் பாக் செல்ல வேண்டுமென கூறினர்.
கடை உரிமையாளரும் தன்னிடம் வேலை செய்யும் ஊழியரிடம் மூன்று வைரங்களை ஒரு பெட்டியில் போட்டு, அவர்களுடன் அனுப்பினார். அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
வழியில் ஊழியரிடம் இருந்து வலுக்கட்டாயமாக வைரங்களை கேட்டு வாங்கிய இருவரும், அதை சோதிப்பதுபோல் நடித்தனர். சிறிது நேரத்தில் அந்த வைரங்கள் போலி என்றும் அதனால் அவற்றை வாங்க விரும்பவில்லை என்றும் கூறி, ஊழியரை பாதியிலேயே இறக்கிவிட்டு, அவர்கள் சென்றுவிட்டனர்.
கடைக்குத் திரும்பிய ஊழியர், நடந்ததை உரிமையாளரிடம் கூறினார். சந்தேகமடைந்த அவர், வைரங்களை சோதித்தபோது, அவை போலி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட, சாகர் குப்தா, 37, என்பவரை குர்கானில் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரிஸ் உத்தர கண்ட் மாநிலம் ஹரித்வாரில் மறைந்திருந்த சந்தர் சேகர், 44, என்ற கூட்டாளியை கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து வைரங்களை வாங்கிய மதுசூதன் அகர்வால், 54, என்பவரையும் போலீசார் கைது செய்து, வைரங்களை மீட்டனர்.