ADDED : பிப் 25, 2025 05:26 AM

மாண்டியா: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர், விஷம் குடித்து விட்டு, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மாண்டியா, ஸ்ரீரங்கபட்டணாவின் கஞ்சாம் கிராமத்தில் வசித்தவர் மாஸ்தப்பா, 65. இவரது மனைவி ரத்னம்மா, 45. தம்பதிக்கு லட்சுமி, 18, என்ற மகள் உள்ளார். மாஸ்தப்பா ஆட்டோ ஓட்டி, குடும்பத்தை நிர்வகித்து வந்தார்.
குடும்ப தேவைக்காக மூன்று லட்சம் ரூபாய் உட்பட பல இடங்களில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் சுமை அதிகரித்தது. கடன் கொடுத்தவர்கள் கடனை அடைக்கும்படி, நெருக்கடி கொடுத்தனர். இவர்களின் நெருக்கடியை பொறுக்க முடியாமல், தங்களின் வீட்டை விற்று, கடனை அடைக்க, மாஸ்தப்பா முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் கடன்காரர்கள் சிலர், நேற்று காலை மாஸ்தப்பாவின் வீட்டுக்கு வந்து, தகராறு செய்தனர். அக்கம், பக்கத்தினர் முன்பு அவமானமாக இருந்ததால், மனம் நொந்த குடும்பத்தினர் மனம் நொந்து காணப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து மாஸ்தப்பா தன் ஆட்டோவில், மனைவி, மகளுடன் மாண்டியாவின், சந்தகாலு அருகில் உள்ள வி.சி., கால்வாய்க்கு வந்தார். அங்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு, மூவரும் விஷம் குடித்துவிட்டு, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த மாண்டியா ஊரக போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், கால்வாயில் இருந்து மாஸ்தப்பா, ரத்னம்மா உடல்களை மீட்டனர். மகளின் உடலை தேடுகின்றனர்.
மாண்டியா ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.