ADDED : ஜூலை 05, 2024 01:34 AM
புராரி: டில்லி, ஹரியானாவில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புராரி காவல் நிலையத்தில் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்து குறித்து ரியல் எஸ்டேட் வியாபாரி அர்ஜுன் என்பவர், கடந்த மாதம் 30ம் தேதி புகார் அளித்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும் 50 ஆயிரம் ரூபாய், ஒரு தங்க செயின், ஒரு மோதிரம் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். விசாரணை நடத்தியதில் மே 9ம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்துடன் இந்த சம்பவம் ஒத்துப்போவது தெரிய வந்தது.
மேலும் விசாரணை நடத்தி, ஹரியானாவைச் சேர்ந்த ரவீந்தர், 37, மன்தீப் மான், 30, அர்ஜுன், 36 ஆகிய மூவரை கைது செய்தனர்.
இந்த கும்பல், வடக்கு டில்லியில் உள்ள புராரி மற்றும் ஸ்வரூப் நகரில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் ஹரியானாவிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.
இவர்களிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள், ஒரு பொம்மை துப்பாக்கி மற்றும் திருடப்பட்ட பொருட்கள் சிலவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.