தாறுமாறாக ஓடிய லாரி நடைபாதையில் துாங்கிய மூன்று பேர் நசுங்கி பலி
தாறுமாறாக ஓடிய லாரி நடைபாதையில் துாங்கிய மூன்று பேர் நசுங்கி பலி
ADDED : ஆக 26, 2024 11:35 PM

புதுடில்லி: டில்லியில் நடைபாதையில் உறங்கியவர்கள் மீது லாரி ஏறி விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகினர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
டில்லியின் வட கிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில், உரிய இருப்பிட வசதி இல்லாதவர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.
இவர்கள், இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் நடைபாதையில் படுத்து துாங்குவது வழக்கம்.
இதேபோல் நேற்று அதிகாலையும், ஏராளமானோர் நடைபாதையில் துாங்கினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, நடைபாதையில் துாங்கியவர்கள் மீது ஏறியது.
இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தன. அவர்கள் அருகில் துாங்கிய மேலும் இருவர், படுகாயம் அடைந்தனர்.
தப்பி ஓடிய லாரி டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
இறந்தவர்களில் ஒருவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி என தெரியவந்தது. மற்ற இருவர் யார் என தெரியவில்லை.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'அதிகாலை 4:30க்கு இந்த விபத்து நடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம்.
'அதிகாலை நேரம் என்பதால், இருளை பயன்படுத்தி லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்' என்றனர்.