குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொலை; மூன்று பெண்கள் ஆந்திராவில் கைது
குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொலை; மூன்று பெண்கள் ஆந்திராவில் கைது
UPDATED : செப் 08, 2024 03:50 AM
ADDED : செப் 08, 2024 12:42 AM

தெனாலி, ஆந்திராவில், முன்பின் அறிமுகமில்லாத நபர்களுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து பணம், நகைகளை திருடுவதை வழக்கமாக வைத்திருந்த மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவின் தெனாலி மாவட்டத்தில், மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், மர்மமான முறையில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து பணம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. மூவருமே குளிர்பானத்தில் சயனைடு விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விசாரணையின் போது, முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குல்ரா ரமணம்மா என்ற மூன்று பெண்களை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது, பணம் மற்றும் நகைகளுக்காக இந்த தொடர் கொலைகளை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
முன்பின் தெரியாதவர்களுடன் நட்புடன் பழகி குளிர் பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொல்வதே அவர்கள் வாடிக்கை என்பதையும் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து சயனைடு உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார், இவர்களுக்கு சயனைடு சப்ளை செய்த நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்களில், மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் குற்றப்பின்னணி உடையவர்.
தெனாலியில் தன்னார்வலராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய அவர், தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியா சென்று, 'சைபர்' குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.