ADDED : மே 17, 2024 08:59 PM

தன்னை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச்செயலர் தாக்கியதாக, மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் ஸ்வாதி மாலிவால் குற்றஞ்சாட்டியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை 11:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி பிபவ் குமாருக்கு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து நேற்று அவருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க ஆணையம் முடிவெடுத்தது. இதற்காக டில்லி காவல் துறை உதவியுடன் மகளிர் ஆணைய உறுப்பினர்கள், பிபவ் குமார் வீட்டிற்குச் சென்றனர். வீட்டில் உள்ளவர்கள் நோட்டீசை பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா கூறியதாவது:
மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை பெற்றுக் கொள்ள பிபவ் குமாரின் மனைவி மறுத்துவிட்டார். இதையடுத்து அவரது இல்லத்தின் வாயிலில், நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
'நாளை (இன்று) காலை தேசிய மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால், அவரது வீட்டுக்கே சென்று மகளிர் ஆணையம் விசாரிக்கும்.
ஸ்வாதி மாலிவாலை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சம்பவம் அவரது (கட்சி) தலைவரின் வீட்டில் நடந்ததால், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நினைக்கிறேன்.
அவர் அதிர்ச்சியிலிருந்து வெளியே வருவதற்கு நேரம் எடுக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அவர் மீண்டு வந்த உடன் தனிப்பட்ட முறையில் ஸ்வாதியை சந்திப்பேன். அவள் இப்போது நன்றாக இருக்கிறாள் என்று நம்புகிறேன்.
இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கவலைப்படவில்லை என்பதையே, தன்னுடன் குற்றஞ்சாட்டப்பட்டவரை அழைத்துச் செல்வது காட்டுகிறது. ஒரு பெண்ணை ஆதரிக்காமல், ஒரு குற்றவாளியை ஆதரிக்கிறார்.
பெண்களின் பெயரில் இலவசங்களை வினியோகிக்கிறார். ஆனால் தன் வீட்டில் ஒரு பெண் தாக்கப்படும்போது, கண்ணை மூடிக்கொண்டார். இதற்கு காரணமானவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிபவ் குமாருக்கு ஆதரவாக முதல்வர் செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

