பிரசாரத்துக்கு டிமிக்கி - பா.ஜ.,வுக்கு பெப்பே! பசுக்களுடன் பொழுதுபோக்கும் எம்.எல்.ஏ.,
பிரசாரத்துக்கு டிமிக்கி - பா.ஜ.,வுக்கு பெப்பே! பசுக்களுடன் பொழுதுபோக்கும் எம்.எல்.ஏ.,
ADDED : மார் 31, 2024 03:23 AM
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியான பின், மாயமான பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், பிரசாரத்துக்கு டிமிக்கி கொடுத்து, பசுக்களுடன் பொழுதுபோக்குகிறார். இவரை கண்டிக்க முடியாமல் பா.ஜ., மேலிடம் பரிதவிக்கிறது.
கர்நாடக ஆளுங்கட்சி காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் லோக்சபா தேர்தலுக்கு தயாராகின்றன. அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள், தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், பிரசாரத்தில் தென்படவில்லை.
எப்போதும் பரபரப்பாகவே இருப்பவர் பசனகவுடா பாட்டீல் எத்னால். தன் கட்சியினர் பற்றியே, சர்ச்சைக்குரிய வகையில் பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்துவார். குறிப்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை வசைபாடுவது என்றால், எத்னாலுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.
மாநில பா.ஜ., தலைவர் பதவி, தனக்கே கிடைக்குமென, அவர் மிகவும் எதிர்பார்த்தார். இதற்காக கடுமையான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
ஆனால் பா.ஜ., மேலிடம், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு 'பட்டம்' சூட்டியது. அன்றிலிருந்தே எத்னால் தன் கோபம், ஆற்றாமையை வார்த்தைகளால் வெளிபடுத்துகிறார். எடியூரப்பா, விஜயேந்திரா, ராகவேந்திரா குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை தவிர, பா.ஜ.,வின் மற்ற தலைவர்களை பகிரங்கமாகவே திட்டுகிறார். இவருக்கு கட்சியின் ஒழுங்கு கமிட்டி விளக்கம் கேட்டு, நோட்டீசும் அனுப்பியது. ஆனால் அதையும்கூட எத்னால் பொருட்படுத்தவில்லை.
கட்சியின் 'பையர் பிராண்ட்' என, அழைக்கப்படும் எத்னால் மீது, நடவடிக்கை எடுக்கவும் முடியாமலும், அப்படியே விடவும் முடியாமலும் பா.ஜ., மேலிடம் கையை பிசைகிறது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு நெருங்குகிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்படி, கட்சி மேலிடம் உத்தரவிட்டும் எத்னால் மவுனமாக இருக்கிறார். பல எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்கின்றனர். தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.
முக்கியமான தறுணத்தில், எத்னால் திடீரென மாயமாகிவிட்டார். தொண்டர்கள், ஆதரவாளர்களின் கண்களிலும் தென்படவில்லை. இவர் எங்கு போனார் என, தேடி வந்தனர். தற்போது இவர் எங்கிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
விஜயபுரா நகர் அருகில் உள்ள, கக்கோடா என்ற இடத்தில் பசுக்கள் பராமரிப்பு மையம் உள்ளது. அங்கு சென்றுள்ள எத்னால், பசுக்களுக்கு சேவை செய்கிறார். இந்த தகவலை அவரே, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
டீ சர்ட், ஷார்ட் அணிந்து, ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்துள்ள அவர், பசுக்களுக்கு தீவனம் போடுவது, பசுக்கள், கன்றுகுட்டிகளின் உடல்களை வருடும், கொஞ்சும் படங்களை வெளியிட்டுள்ளார்.
வேட்பாளர்களின் வெற்றிக்காக, பணியாற்ற வேண்டிய மூத்த தலைவர், பசுக்களுடன் பொழுதுபோக்குவதால், பா.ஜ., தலைவர்களும், தொண்டர்களும் கடுப்படைந்துஉள்ளனர்.
- நமது நிருபர்

