* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த.... ஒப்பந்தம் :* மத்திய அரசுடன் டில்லி அரசு கையெழுத்து * ஆம் ஆத்மி அரசு கிடப்பில் போட்டிருந்தது
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த.... ஒப்பந்தம் :* மத்திய அரசுடன் டில்லி அரசு கையெழுத்து * ஆம் ஆத்மி அரசு கிடப்பில் போட்டிருந்தது
ADDED : ஏப் 05, 2025 10:33 PM
புதுடில்லி:ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டில்லியில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், மத்திய அரசும், டில்லி அரசும் நேற்று கையெழுத்திட்டன. இதனால், ஒரு குடும்பம் 10 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சையை பெற முடியும்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பத்தினர், சிறந்த மருத்துவ வசதியைப் பெற, 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' திட்டம், கடந்த 2018ம் ஆண்டு செப்., 23ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்டது.
நாடு முழுதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்திருந்தும், தலைநகர் டில்லியில் அப்போது ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, மத்திய அரசின் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில், டில்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின்போதே, பா.ஜ., ஆட்சி அமைத்தால் பிரதமரின், ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 48 இடங்களில் வென்று, பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, 22 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது.
முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா தலைமையில் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டில்லியில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், முதல்வர் ரேகா கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்த 12,893 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா' திட்டத்தை டில்லியில் செயல்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா மற்றும் டில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் முன்னிலையில், டில்லி அரசுக்கும் தேசிய சுகாதார ஆணையத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதன் வாயிலாக, மத்திய அரசின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் 35வது மாநிலம் என்ற இடத்தை டில்லி அடைந்துள்ளது. இந்த திட்டத்தை, மேற்கு வங்க மாநிலம் மட்டும் இதுவரை செயல்படுத்தவில்லை.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 27 சிறப்பு மருத்துவமனைகளில் 1,961 சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மருந்து, நோயறிதல், மருத்துவமனையில் அனுமதித்தல், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி, அறுவைச் சிகிச்சைகள் ஆகியவையும் இந்த திட்டத்தில் உள்ளன.
இந்த திட்டம் அமலாவதால், டில்லியில் உள்ள தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சையை பெறலாம். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய அரசு 5 லட்சம் ரூபாயும், மாநில அரசு 5 லட்சம் ரூபாயும் வழங்குகிறது.

