ADDED : மார் 14, 2025 12:20 AM

புதுடில்லி :போட்ட முதலீடுகள் கிடைத்ததும், சுங்கச்சாவடிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு, 'சுங்கச்சாவடிகள் நிரந்தரமானவை, அவை மூடப்படாது' என, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார்.
'நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச்சாவடிகளில், அந்தச் சாலையை அமைப்பதற்காக செலவிடப்பட்ட தொகை வசூலிக்கப்பட்ட நிலையில், அவை மூடப்படுமா? இது தொடர்பாக ஏதாவது தணிக்கை ஆய்வு நடக்கிறதா' என, ராஜ்யசபாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த வில்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.
நிரந்தரம்
இதற்கு பதிலளித்து, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
முன்பு, 'டோல்' எனப்படும் சுங்கக் கட்டணம், தற்போது பயன்பாட்டு கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் அடிப்படையிலேயே இவை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன.
இது நிரந்தரமான நடவடிக்கை. அதனால், சாலை அமைக்க செய்த முதலீடுகள் கிடைத்துவிட்டதால், அதை மூடுவது தொடர்பாக எந்த தணிக்கை ஆய்வும் தேவையில்லை.
தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் - 2008ன்படி, தனியார் உதவியுடன் அமைக்கப்படும் சாலைகளில் ஒப்பந்த காலம் முடியும் வரை அந்த நிறுவனங்கள் கட்டணத்தை வசூலிக்கலாம்.
வசூல் தொடரும்
அதன்பின், அரசு நேரடியாக அல்லது அது நியமிக்கும் அமைப்புகள் வாயிலாக கட்டணத்தை வசூலிக்கலாம்.
அதே நேரத்தில் அரசே நேரடியாக முதலீடு செய்யும் திட்டங்களில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கட்டணத்தை அரசு தொடர்ந்து வசூலிக்கலாம்.
மேலும், விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை திருத்தலாம். அதனால், சுங்கச்சாவடிகளை மூடுவது என்ற கேள்வியே எழவில்லை.
தமிழகத்தை பொறுத்தவரை, 1,046 கி.மீ., துாரத்துக்கு, 38,359 கோடி ரூபாய் செலவில், 48 நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. இவற்றை, 2027 பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவது, நிலத்தின் வகையை மாற்றுவது, மழைக்காலங்களில் வேலை செய்யக் கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவு, கான்ட்ராக்டர்கள் சரியாக திட்டமிடாதது போன்றவை காரணமாக, இவற்றில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.