அமைச்சர் ராஜண்ணா வாய்க்கு பூட்டு போட மேலிடம் முடிவு
அமைச்சர் ராஜண்ணா வாய்க்கு பூட்டு போட மேலிடம் முடிவு
ADDED : ஜூன் 15, 2024 04:24 AM

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் பதவி குறித்து பேசி, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் அமைச்சர் ராஜண்ணா வாய்க்கு பூட்டு போட, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்து உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு நடக்கிறது. துணை முதல்வராக சிவகுமார் உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸை அதிக இடங்கள் வெற்றி பெற வைக்கும் நோக்கில், மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்க வேண்டும் என்று, கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் வெளிப்படையாக கூறியிருந்தனர்.
இதற்கு சிவகுமார் ஒப்புக்கொள்ளவில்லை. கூடுதல் துணை முதல்வர் நியமித்தால், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டினார்.
இதனால் லோக்சபா தேர்தல் முடியும் வரை துணை முதல்வர் பதவி குறித்து யாரும் பேசக்கூடாது என, கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
தற்போது லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டது. இதனால் துணை முதல்வர் பதவி பற்றி, அமைச்சர் ராஜண்ணா பேச ஆரம்பித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வெற்றி பெறுவதற்கு, கூடுதல் துணை முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என கூறினார்.
ராஜண்ணாவை தொடர்ந்து சில அமைச்சர்களும், கூடுதல் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால், சிவகுமார் கடுப்பாகி உள்ளார். கட்சி மேலிடத்திடம், துணை முதல்வர் பதவி பற்றி பேசுவோர் மீது புகார் அளிக்க தயாராகி வருகிறார்.
ஏதாவது புகார் அளிக்கும் பட்சத்தில், ஆட்சியில் ஏதாவது குளறுபடி ஏற்படலாம்.
இதனால் விழித்துக் கொண்ட மேலிடம், 'துணை முதல்வர் பதவி பற்றி பேசாதீர்கள்' என, அமைச்சர் ராஜண்ணாவுக்கு வாய் பூட்டு போட திட்டமிட்டுள்ளது.

