பனசங்கரி கோவிலில் பூஜை ரசீது பெற தொடுதிரை இயந்திரங்கள்
பனசங்கரி கோவிலில் பூஜை ரசீது பெற தொடுதிரை இயந்திரங்கள்
ADDED : மே 27, 2024 07:37 AM

பெங்களூரு: பெங்களூரு பனசங்கரி கோவிலில் பூஜை ரசீது பெற, பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ரசீது கொடுக்கும் இரண்டு 'தொடுதிரை' இயந்திரங்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.
பெங்களூரு கனகபுரா ரோடு சர்பந்தபாளையாவில், பனசங்கரி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய்கிழமை 5,000; வெள்ளிக்கிழமை 10,000; மற்ற நாட்களில் 600 முதல் 800 பக்தர்கள் வரை வருகின்றனர்.
கோவிலில் சிறப்பு பூஜை செய்வதற்கு ரசீது வாங்குவதற்காக, நீண்ட வரிசையில் காத்து நிற்பதால், பக்தர்கள் சோர்வு அடைகின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக பூஜை ரசீது வழங்குவதற்காக, பனசங்கரி கோவிலில் இரண்டு தொடுதிரை இயந்திரங்களை சோதனை அடிப்படையில், கர்நாடக அறநிலையத்துறை நிறுவி உள்ளது. இந்த இயந்திரங்கள் சேவை இன்று முதல் துவங்குகிறது.
பக்தர்கள் என்ன பூஜை செய்ய விரும்புகின்றனரோ, அந்த பூஜையின் பெயர்கள் தொடுதிரை இயந்திரங்களில் இருக்கும். தங்கள் விரும்பும் பூஜையை தேர்வு செய்து, போன்பே, கூகுள்பே மூலம் பணம் செலுத்தினால், இயந்திரம் ரசீது கொடுத்து விடும்.
இந்த முயற்சி வெற்றி அடைந்தால், மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களில், தொடுதிரை இயந்திரங்களை நிறுவ, அறநிலையத்துறை முடிவு செய்து உள்ளது.

