ADDED : பிப் 25, 2025 11:55 PM

சாம்ராஜ்நகர்; பிரதமர் நரேந்திர மோடி வந்து சென்ற பின், பண்டிப்பூர் விலங்குகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.
இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சாம்ராஜ் நகரின், பண்டிப்பூர் விலங்குகள் சரணாலயம், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற வனப்பகுதியாகும். இங்கு 191 க்கும் மேற்பட்ட புலிகள், 1,116 க்கும் மேற்பட்ட யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான், காட்டெருமை என, பல்வேறு விலங்குகள், பறவைகள் உள்ளன.
சமீப ஆண்டுகளாக பண்டிப்பூருக்கு பெருமளவில் சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
குறிப்பாக பண்டிப்பூர் வன விலங்குகள் சரணாலயத்துக்கு பிரதமர் மோடி வந்து சென்ற பின், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
சபாரி கட்டணம், நுழைவு கட்டணத்தால் 2023 - 24ல் 19 கோடி ரூபாய், 2024 - 25ல் 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்தது. இம்முறை வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பண்டிப்பூர் வனவிலங்குகள் சரணாலயத்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, அதிருப்தி ஏற்படாது. சபாரிக்கு செல்வோர் வன விலங்குகளையும், பசுமையான இயற்கை காட்சிகளையும் ரசிக்கலாம்.
பண்டிப்பூர் வனத்தை தேசிய புலிகள் சரணாலயம் என, அறிவித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 2023ன் ஏப்ரல் 9ம் தேதி, பிரதமர் மோடி பண்டிப்பூருக்கு வந்தார்.
சபாரி சென்றார். இது தேசிய அளவில் பேசப்பட்டது. அதன்பின் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

