தண்டவாளத்தில் நடந்த வியாபாரி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
தண்டவாளத்தில் நடந்த வியாபாரி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
ADDED : ஏப் 20, 2024 11:03 PM
புதுடில்லி,:மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் வியாபாரி ஒருவர் நடந்து சென்றதால், ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
மெட்ரோ ரயில் டில்லியில் 12 வழித்தடங்களில் 393 கி.மீ., நீளத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் துவாரகா செக்டார் 21 முதல் நெய்டா எலக்ட்ரானிக் சிட்டி வரையில் 3வது வழித்தடம் எனப்படுகிறது.
இதில் ப்ளூலைன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மொத்தம் 50 ரயில் நிலையங்கள் கொண்ட இந்த வழித்தடத்தில் நேற்று முன்தினம் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திலக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் மாலை 3:20 மணி அளவில் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
ரயில் நிர்வாகத்தினர் அழைப்பையும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதனால் அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.
ரயில் நிலைய பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து, அந்த நபரை பிடித்து ரயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
தன் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக விரக்தியில் தண்டவாளத்தில் நடந்து சென்றது விசாரணையில் தெரிய வந்தது. 64 வயதான அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதனால் அந்த வழித்தடத்தில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

