ADDED : ஜூலை 15, 2024 04:33 AM

சிக்கபல்லாபூர், : வார இறுதி நாள் என்பதால், நந்திமலைக்கு பெருமளவில் சுற்றுலா பயணியர் வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கி.மீ., கணக்கில் வாகனங்கள் வரிசையில் நின்றிருந்தன.
சிக்கபல்லாபூரின் நந்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகை தருவர். பெங்களூருக்கு வெகு அருகில் இருப்பதால், ஐ.டி., நிறுவனங்களின் ஊழியர்கள், மாணவ -- மாணவியர் உட்பட ஏராளமானோர் வருவர்.
வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் களை கட்டும். மலைக்கு செல்லும் பாதையில், போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், அதிகாலையே வாகனங்களில் நந்தி மலைக்கு புறப்பட்டனர். அதிகாலை 5:00 மணியில் இருந்தே நந்திமலை சாலையில், கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நெருக்கடி 5 கி.மீ., வரை தொடர்ந்தது. நந்திமலைக்கு செல்வோர், திரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஒரே நேரத்தில் வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
